வாழ்வை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

வாழ்வை வளமாக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு...

ஆரூர் சுந்தரசேகர்.

          இந்து மக்களின் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி     அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு     கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள்   வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுகின்றது.
        இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும், நேபாளத்திலும் விநாயகர் சதுர்த்தி சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் பத்து நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன.
விநாயகரை பற்றி புராணங்கள்:
       ஓங்கார வடிவமாக விளங்கும் விநாயகர், யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக விளங்குபவர். விநாயகரை முழு முதற்கடவுள் எனக் கொண்டு வழிபாடு செய்வது காணாபத்தியம் எனும் வழிபாட்டு முறையாகும். விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்
    கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது ’கணேச புராணம்’.
       கிருத யுகத்தில் மகாகடர் என்ற பெயருடன் காஷ்யப முனிவருக்கும் அதீதி தேவிக்கும் தேஜஸ்வி என்ற பெயரில் மகனாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார்.
       திரேதா யுகத்தில் பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம் பெற்றார்.
       துவாபர யுகத்தில் கஜானனன் என்ற திருநாமத்துடன் பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் மனைவி வத்ஸலாவுக்கு மகனாகப் பிறந்தார்.
       கலியுகத்தில் ஈஸ்வரனுக்கும் பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது.
                ஐந்து கரங்களையும், யானை முகத்தினையும், சந்திரனைப் போன்ற தந்தங்களை கொண்ட ஞானக் கொழுந்தான விநாயகரைப் போற்றினால் புத்தி வளரும், நலங்கள் பெருகும் என, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தனது திருமந்திரத்தில் பாடியுள்ளார்
        'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி’ என்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பற்றி பாடியுள்ளார், அதாவது முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங்களுக்குமான பரிகாரமாக அமையும்.
           திருமந்திரத்திலும் மற்றும் பதினோராம் திருமுறையில் கபிலதேவர், பரணதேவர், அதிராவடிகள், நம்பியாண்டார் நம்பிகள் ஆகியோரின் பாடல்களிலும் விநாயகர் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறார்.
    'வானுலகும், மண்ணுலகும் வாழ, நான்கு மறை வாழ, செய்ய தமிழ் பார்மிசை விளங்க, ஆனைமுகனைப் பரவு’ என்கிறார் சேக்கிழார்.
       விருத்தாசல புராணத்தில் , பாதாள விநாயகரின் பெருமைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மற்றும் 'உலகத் தொல்லைகள், பிறவித் தொல்லைகள் போகவும், செல்வமும் கல்வியும் கருணையும் வந்து சேரவும் கணபதியைக் கைதொழ வேண்டும்’ என்கிறது.
     ஔவையார், விநாயகர் அகவலில் யோக தத்துவத்தையும், விநாயகர் தரும் இக, பர சௌபாக்கியங்களையும் பாடியுள்ளார். 'முன்னை வினையின் முதலைக் களைந்து, எல்லை இல்லா ஆனந்தம் அளித்து, அருள்வழி காட்டுபவர், அற்புதம் நின்ற கற்பகக் களிறு’ என்று கூறியுள்ளார். இதைத்தவிர 'துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!' என விநாயகப் பெருமானை வேண்டி சங்கத் தமிழ்ப் பாடல்கள் பாடியுள்ளார்.
           திருவாவடுதுறை ஆதீன கச்சியப்ப முனிவர் விநாயக புராணத்தை சிறப்பாக பாடியுள்ளார். இதில் விநாயகரின் தோற்றம், பெருமை, விரதங்கள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. இதில் விநாயகரை வணங்கும் பக்தருக்குத் துன்பம், வறுமை, நோய் நெருங்காது  மற்றும் துக்கம், சோகம், மோகங்கள், பாவங்கள், பகைகள் எதுவும் வராமல் தடுக்கும்  என்கிறார்.
எளிமையான பிள்ளையார் வழிபாடு:
         கோயில் என்று பெயர் வைத்து கூரையும் விமானமும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை முச்சந்தி நாற்சந்தி தெருமுனை என பிள்ளையார் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது.
    கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால்   பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது, மண், பசுஞ்சாணம், மஞ்சள், மாக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத்தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம் ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர்.  இவ்வாறு விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.
மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் ஏற்படும்.
குங்குமத்தில் பிடித்து வைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகுவதாக ஐதீகம்.
பசும் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயம் செழிப்பதுடன், உடல் நோய்கள் அகலுவதாகவும் நம்பிக்கை.
வெல்லம் மூலம் அமைக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட்டால், உடலுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய இடங்களில் உருவாகும் கட்டிகள் மற்றும் கொப்புளங்கள் மறைந்து விடுவதாக ஐதீகம்.
உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை விலகி விடுவதாக நம்பிக்கை.
வெள்ளெருக்கு விநாயகரை வழிபாடு பில்லி, சூனிய பாதிப்புகளை தடுக்கிறது.
விபூதியால் பிடித்து வைத்து வழிபட்டால் நோய்கள் தீர்வதாக ஐதீகம்.
சந்தன பிள்ளையார் வழிபாடு காரணமாக புத்திர பாக்கியம் ஏற்படுவதாக நம்பிக்கை.
சர்க்கரை பிள்ளையார் செய்து வழிபட்டால் நீரிழிவு நோய் தீரும் வாய்ப்புகள் ஏற்படும்.
வாழைப்பழத்தில்அ பிள்ளையாரை அமைத்து வழிபட்டால் வம்ச விருத்தி ஏற்படுவதாக நம்பிக்கை.
வெண்ணெய் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் வியாபார கடன் உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைகளும் விலகுவதாக ஐதீகம்.

பிள்ளையாருக்கு வேறு பெயர்கள்:
         பிள்ளையாரை விநாயகர், சர்வாயுதர், மயூரேசர், கபிலர்,விகடர் ,கணபதி,ஐங்கரன், தேவநாகரி, கஜானன், ஆனைமுகத்தான், தும்பிக்கை ஆழ்வார்,விக்னேஸ்வரன் என்ற பல வேறு பெயர்களால் நம்மால் போற்றித் துதிக்கப்படும்.  பிள்ளையாரின் வழிபாடு உலகம் முழுவதும் பரவியிருந்திருக்கிறது. திபெத்தியர்களால் ட்ஸோக்ப்டாக் என்றும், மங்கோலியாவில் தோத்கார் அவுங்காரகன் என்றும் கம்போடியாவில்  ப்ராஹ்கெனேஸ் என்றும், பர்மாவில் மகாபைனி என்றும் அழைக்கப்படும் இவர், ஜாவாதீவில் கபால மாலையணிந்து காணப்படுகிறார்.
       விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, விக்னேஷ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்புப் பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல,
விநாயகரை  பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடுகின்றனர்.
        இந்தோனேசியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது

விநாயகர் சதுர்த்தி பூஜை:
   காலையில் எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். ஒரு பலகையைச் சுத்தம் செய்து கோலம் , காவி இட்டு அதன்மேல் தலைவாழை இலையின் நுனி பாகத்தை வடக்கு முகமாகத் திருப்பிப் போட்டு அதில் சிறிது அரிசியைப் பரப்பி அதன் மேல் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும். (விநாயக சதுர்த்தி களிமண்ணால் வீட்டிலேயே பிள்ளையார் செய்து பூஜை செய்தால் விசேஷம் . மஞ்சள் , சந்தனம் , சாணம் , புற்று மண் , வெல்லம் இவைகளைக் கொண்டும் பிள்ளையார் செய்து வழிபடலாம் . இக்காலத்தில் அச்சுப் பிள்ளையார் தயாராகக் கடையில் கிடைக்கின்றது) பிள்ளையாருக்குக் காகிதத்தில் ஒரு அழகாகக் குடை ஒன்றும் வைக்க வேண்டும் .
    முதலில் மஞ்சளில் விநாயகர் செய்து பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அவரிடம் நான் விநாயகர் சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பிறகு விநாயகருக்கு  வஸ்திரம் எருக்கம்பூ மாலை , அருகம்புல் மாலை சார்த்த வேண்டும் . வரலக்ஷ்மி பூஜை மாதிரி மண்டபம் அமைத்து , இரு பக்கமும் வாழை மரங்கள் கட்டியும் அதில் அவரை அமர்த்தி அலங்காரம் செய்யலாம் . ( எல்லாம் அவரவர்கள் செளகரியங்களைப் பொறுத்துச் செய்யலாம்)
     பிள்ளையாருக்கு பூஜை செய்ய ' பத்திரங்கள் ' (இலைகள்) மாவிலை , சங்கு புஷ்ப இலை , மாதுளம் இலை , நாக இலை , அருகம் புல் , தங்க அரளி இலை மற்றும் தும்பைப்பூ முதலிய எல்லாவிதமான புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.
   நைவேத்தியத்திற்கு , கொழுக்கட்டை , மோதகம் , இட்லி , வடை , சுண்டல் , அப்பம் , எள்ளுருண்டை , பாயஸம் , அவல் , பொரி , வாழைப் பழம் , கொய்யாப் பழம் , நாவற்பழம் , விளாம்பழம் , தேங்காய் , வெற்றிலை பாக்கு வைத்து கணேசாஷ்டகம் சொல்லி பூஜை செய்ய வேண்டும் .
     மோதகம் நைவேத்தியம் செய்து முதன் முதலாக வழிபட்டவர் வசிஷ்ட முனிவரின் பத்தினியான அருந்ததி தேவியார் என்று புராணம் கூறுகிறது ! அவல் , பொரி , வெல்லம் , கடலை , பழம் , தேங்காய் , எள்ளுருண்டை முதலியன அவருக்கு விருப்பமான பிரசாதங்களாகும் . விநாயகப் பெருமான் பூஜையிலும் , தமது அருட் தோற்றத்திலும் தம்மை மிக எளிமையாக்கிக் கொண்டு அவரை வழிபடும் பக்தர்களுக்கு பெருமளவு சுகபோகத்தையும் சௌகரியத்தையும் அளிக்கிறார். விநாயகப் பெருமானின் சதுர்த்தியை முறையோடு கொண்டாடி , நாம் அவரது அன்பையம் அருளையும், அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெறுவோமாக.
       மறுநாள் புனர் பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ, அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய்   விடுவது வழக்கம்.
    விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.

   இந்த வருடம் 2019 - ல் விநாயகர் சதுர்த்தி வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி திங்கள்கிழமை வருகிறது.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...