ஆடி பெருக்கின் மகிமை...
ஆடி பெருக்கின் மகிமை...
ஆரூர் சுந்தரசேகர்.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18 ஆம் நாள் தமிழ்நாட்டில் எல்லாவித ஆறுகள் பெருக்கெடுத்து ஓடியதால் இந்த பெயர் வந்தது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு கொண்டாடும் விழா இது மட்டும் தான். ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர்.
ஆடிப்பட்டம் தேடிவிதை :
ஆடி மாதத்தில் நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். தென்மேற்கு பருவ மழை காரணமாக ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதைகளை விதைக்க ஆரம்பிப்பார்கள். ஆறு பெருக்கெடுத்து ஓடும் அன்று ஆற்றின் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனால் தான் ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழி வந்தது.
ஆடிப்பெருக்கு விழா :
ஆடிப்பெருக்கு அன்று மக்கள் ஆற்றங்கரைகளில் ஒன்று கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு மகிழ்ச்சி அடைவர். கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒரு பகுதியை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து விளக்கினை ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து நைவேத்தியம் செய்கிறார்கள் பிறகு கற்பூரம் காட்டி, ஆற்றின் நீருக்கு நன்றி செலுத்தி வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதனை ஆற்றில் விடுவார்கள். பிறகு தங்கள் வீட்டிலேயே தயாரித்து கொண்டு வந்த பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தயிர் சாதம்) ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் உணவை சாப்பிடுவார்கள். ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் சுமங்கலிப் பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள். ஏற்கனவே கழுத்திலிருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில் விட்டுவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியைக் கோர்த்து, கணவன் மூலமோ அல்லது சுமங்கலிப் பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள்.
ஆடிப்பெருக்கும் செல்வ பெருக்கும் :
ஆடிப்பெருக்கன்று லட்சுமி தேவி பூரண மகிழ்ச்சியுடன் இருப்பார் எனவே அந்த சமயத்தில் லட்சுமி தேவியை வணங்கும்போது கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆகையினால் ஆடிப்பெருக்கன்று லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வம், குழந்தை பாக்கியம், தைரியம் என அனைத்தும் கிடைக்கும். அதேபோல ஆடிப்பெருக்கு அன்று குபேரனை வழிபட்டாலும் செல்வம் தழைக்கும். இதனால் ஆடிப்பெருக்கில் நிலம், நகை உள்ளிட்ட எதில் முதலீடு செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும்.
விழாவின் சிறப்பு எங்கே:
தமிழகத்தில் காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதற்கொண்டு காவிரி சங்கமிக்கும் பூம்புகார் வரை ஆடி பதினெட்டாம் பெருக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முன்பு போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவதுஅணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.
03.08.2019 சனிக்கிழமை அன்று ஆடி பதினெட்டு எனும் ஆடி பெருக்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இப்பொழுதும் தமிழ்நாட்டில் ஆறுகள் இல்லாத ஊரிலும் பழைமை வழக்கப்படி ஆடிப்பெருக்கு கொண்டாடுகிறோம். என்பதை நினைக்கும் போது நமது முன்னோர்களின் வழக்கம் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
Comments
Post a Comment