தோஷங்களை போக்கும் பிரதோஷம்!!
தோஷங்களை போக்கும் பிரதோஷம்!!
ஆரூர் சுந்தரசேகர்.
தோஷங்களை எல்லாம் போக்கும் நந்நாளே பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிவபெருமானையும், நந்திதேவரையும் வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை.
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதமாகும். பிரதோஷ வேளையில் சிவபெருமானை வழிபட்டால் ஈசனின் பூரண அருள் கிடைக்கும். பிரதோஷ வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வந்தால் மறுமையிலும் பலன்கள் கிடைக்கும்.
புராணத்தில் பிரதோஷம்:
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றை திருமால், இந்திரன் முதலான தேவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதன்கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது.
இதைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கினர். சிவபெருமானிடம் தங்களை காக்கும் படி வேண்டினர். அவர்களுக்காக சிவபெருமான் ஆலகால விஷத்தினை உண்டார். அவ்விஷம் சிவபெருமானின் வயிற்றினை அடையாமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். ஆலகால விஷம் சிவபெருமானின் தொண்டைக் குழியிலேயே நின்றுபோனது. இதனால் ஆலகால விஷம் சிவபெருமானின் கழுத்தினை நீல நிறமாக மாற்றிவிட்டது. இதன் காரணமாக சிவபெருமான் ‘நீலகண்டர்’ என்ற பெயர்பெற்றார். சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு, பின் நந்தி தேவரின் கொம்புகளின் மத்தியில் நின்றபடி அழகிய நடனம் ஆடினார். அவர் நடனம் ஆடிய அந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுவது.
அன்று முதல் ஒவ்வொரு மாதமும் வரும் திரயோதசியில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சிவபெருமான் நடனம் ஆடிய தினம் சனிக்கிழமையில் என்பதினால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை சனி மஹா பிரதோஷம் என சிறப்பாக வழிபடுகின்றனர்.
பிரதோஷ நேரம் :
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை ஆகிய திரயோதசி திதிகளில் ( 13 ம் நாள் ) மாலை 4.30 முதல் 7.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ நேரமாகும். சிவபெருமான் நஞ்சுண்டு உலகத்தை காத்த அந்த நேரத்தை 'பிரதோஷ காலம் எனக் கூறுகிறோம். இந்த நேரத்தில் சிவாலயங்களுக்குச் சென்று நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசனம் செய்தால் சர்வ பாவமும் விலகும், பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள்.
கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன்:
ஞாயிறு பிரதோஷம்:
சூரிய திசை நடப்பவர்கள் ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று வணங்க வேண்டும்.
பலன்:
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
திங்கள் பிரதோஷம்:
பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று வணங்க வேண்டும்.
பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.
செவ்வாய் பிரதோஷம்:
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று வணங்க வேண்டும்.மனிதனுக்கு வரும் ருண (ருணம் என்பது கடனை குறிக்க கூடியது) மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.
பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும்.
புதன் பிரதோஷம்:
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று வணங்க வேண்டும்.
பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோஷத்திற்கு அழைத்துச் சென்று வணங்க வேண்டும். இதனால் அவர்கள் கல்வி சிறக்கும்.
வியாழன் பிரதோஷம்:
குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று வணங்க வேண்டும்.
பலன்:
கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும்.
வெள்ளி பிரதோஷம்:
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று வணங்க வேண்டும்.
பலன்:
உறவுகள் வளப்படும்.சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
சனி மஹா பிரதோஷம்:
சனி மஹா பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனிக்கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஷ்டம சனி தசை நடப்பவர்களுக்கு வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று வணங்க வேண்டும்.
பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும்.
பிரதோஷ அபிஷேகம்:
பிரதோஷ காலங்களிலும் சிவனுக்கு அபிஷேகம் செய்வது விசேஷமான ஒன்றாகும்.பால், நெய், தேன், சந்தனம், தயிர், நல்லெண்ணய் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் நம் குறை தீர்க்கும் சக்தி உண்டு.
பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள் :
பால் - நீண்ட ஆயுள் .
தயிர்- நல்ல குழந்தைகள்
நெய்- முக்தி
கரும்பு சாறு- ஆரோக்கியம்
பஞ்சாமிர்தம்- செல்வம்
தேன்- இனிய குரல்
இளநீர்- சுகம்
அன்னம் (சமைக்கப்பட்ட அரிசி) - உயர்ந்த வாழ்க்கை
சந்தனம் - லட்சுமி கடாக்ஷம்
எலுமிச்சை பழ சாறு - பயத்தை போக்கும்
சர்க்கரை - பகைமையை நீக்குகிறது
அரிசி மாவு - கடனை தீர்க்கும்.
உங்கள் தேவைக்கிணங்க பிரதோஷ நேரத்தில் சிவனை அபிஷேகம் செய்யும் பொருட்களை வழங்கி இறைவனருளை பெறுங்கள். இன்னல்கள் நீங்கப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
பிரதோஷ காலத்தில் வலம் வரும் முறை:
பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால் பிரதோஷ காலத்தில் திருக்கோவிலை சாதாரணமாக வலம் வருவதைப் போல வலம் வரக்கூடாது. மாறாக, 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ முறையில் தான் வலம் வர வேண்டும்.
அதாவது, சிவாலயத்தில் நந்தியம்பெருமானிடமிருந்து புறப்பட்டு இடப்புறம் சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி, வந்த வழியே திரும்பி, நந்திதேவரை வணங்கி, வலப்புறமாக கோமுகி வரை சென்று மீண்டும் வந்த வழியே திரும்பி நந்திதேவரின் இரு கொம்புகளுக்கிடையே சிவபெருமானை வணங்க வேண்டும். இம்முறைக்கு'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று பெயர்.
ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயத்துடன் அனைவரும் கயிலையை நோக்கி ஓடினர். அப்போது விஷம் அப்பிரதட்சிணமாக அவர்களுக்கு எதிராக வந்து விரட்டியது. எனவே, அவர்கள் வந்த வழியே திரும்பி ஓடினர். அங்கும் அவர்களுக்கு எதிராக விஷம் வந்து துன்புறுத்தியது. இப்படி இடம், வலமாக அவர்கள் வலம் வந்த முறைதான் 'சோமசூக்தப் பிரதட்சிணம்’ என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
'சோமசூக்தப் பிரதட்சிணம்’ செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு "ஆத்ம பிரதட்சணம்" "செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கிட்டும்.
பிரதோஷ வேளையில் நந்தி பகவானுக்கு நைவேத்தியம் செய்யும் முறை :
சுத்தமான கார் அரிசி , உடைத்த பாசிப்பயறு , வெல்லம் , தேங்காய் ஆகிய இந்த நான்கும் கலந்து நிவேதனம் செய்ய வேண்டும் . இறைவன் உட்கொண்ட விஷம் சிறிது கீழே சிந்தியதாகவும் அதைச் சுத்தம் செய்வதற்காக நாவால் நக்கியதால் விஷம் தீண்டிய கெடுதி நீங்கும் பொருட்டு நந்திக்கு காப்பரிசி நிவேதனம் செய்வதும் , அருகம்புல் சாற்றுவதும் முறையானதாகும் .
பிரதோஷ மந்திரம்:
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ.
இம்மந்திரத்தை மாதத்தில் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி தேவருக்கு அருகம்புல் சமர்ப்பித்து, சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்கள் சாற்றி சிவ பெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது 9 முறை அல்லது 11 முறை கூறி வழிபட, பிற மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு நீங்கள் உங்களை அறியாமல் செய்த தீங்கினால் அவர்களால் உங்களுக்கு மனதளவில் கொடுக்கப்பட்ட சாபங்கள் நீங்கும்.
பிரதோஷ சிவதரிசனம்:
பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வரும். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண்டும். பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம். சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம்
பிரதோஷ பலன்கள்:
பிரதோஷ நன்னாளில் வழிபட்டால், தொழில் மேன்மையடையும். வியாபாரம் விருத்தியாகும். லாபம் கொழிக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். கடன்களையெல்லாம் அடைப்பதற்கான வழி பிறக்கும். வாழ்க்கை சிறக்கும். திருமணத் தடை அகலும். தேர்வு எழுதும் மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள்
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க!
“ஓம் நமச்சிவாய”
Comments
Post a Comment