ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதமுறையும் பலன்களும்!
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதமுறையும் பலன்களும்!
ஆரூர் சுந்தரசேகர்.
காலம்காலமாக நமது கலாசாரம், பண்பாடு முதலியவை காக்கும் வகையில் பல பண்டிகைகள், விரதங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் நாம் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றோம். அந்த பண்டிகைகளில் ஒன்றுதான் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி.
ஸ்ரீ மகாவிஷ்ணு ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமி திதியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார்.
இந்தியாவின் பல பகுதிகளில் இந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, என்று பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
ஶ்ரீகிருஷ்ணர் அவதார வரலாறு:
தேவகி - வாசுதேவர் தம்பதியருக்கு எட்டாவது மகனாக ஸ்ரீகிருஷ்ணர் அவதாரம் எடுத்தார். பிறகு கோகுலத்தில் வளர்ப்புத் தாய் யசோதையால் வளர்ந்து பிறகு துவாரகையில் அரசாட்சி செய்தார்.
ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்கு கௌரவர்களுக்கும் நடந்த மகாபாரதப் போரில் அர்ஜூனனுக்கு உபதேசித்த அறிவுரைகள்தான் இந்து மக்களின் புனித நூலான பகவத் கீதை.
கீதையில் கிருஷ்ணர்,"நீ எனக்கு ஒரு இலையையாவது,ஒரு பூவையாவது அல்லது ஒரு பழத்தையாவது கொடு.அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு,எதை கொடுத்தாலும் பக்தியோடு கொடு.சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் ஏற்று கொள்வேன்" என்கிறார்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.
ஸ்ரீகிருஷ்ணரை வீட்டிற்கு அழைத்தல்:
கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் ஶ்ரீகிருஷ்ணர் நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே முக்கிய அம்சமாக கொள்ளபடுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அலங்கரிகிறோம். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் கோலமாக போடுகிறோம். ஏனென்றால் கிருஷ்ணனே தன் பிஞ்சுப் பாதங்களை வைத்து நடந்து, நம் இல்லத்து பூஜை அறைக்கு வருவதாக ஐதீகம்.
ஒரு முறை நாரதர் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கிருஷ்ணர் இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார்.
ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் ஶ்ரீகிருஷ்ணபரமாத்மா "நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பாதுகாப்பேன்” என்றார்.
குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை அரிசி மாவினால் கோலம் போடுவது ஏன்?
கோகுலத்தில் கண்ணன் தனது தோழர்களுடன் கோபியர் இல்லம்தோறும் சென்று வெண்ணெயை எடுத்து சாப்பிடும் பொழுது வீடு முழுவதும் வெண்ணெய் இறைபடும். கண்ணனின் கமல மலர்ப்பாதங்கள் அந்த வெண்ணெயிலே பதிந்து அந்த வீடு முழுவதும் அவரது பாதசுவடுகள் நிறைந்திருக்கும்.பண்டைகாலத்தில் மக்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று வெண்ணையினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்நாளில் வெண்ணைக்கு பதிலாக மாவினால் பாதங்களை கோலமாக போடுகின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜைமுறை :
கிருஷ்ணர் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் பூஜைகள் நடத்தப்படுகிறது.
பூஜை அறையில் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் அல்லது படம் ஏதேனும் ஒன்றை வைத்து சந்தன குங்குமம் இட்டு, மாலை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும். விளக்கு ஏற்றி, ஸ்ரீகிருஷ்ணருக்கு சொல்லப்பட்டிருக்கும் அஷ்டோத்திர (108) மந்திரங்களை சொல்லி ஒவ்வொரு மந்திரத்துக்கும் உதிரி பூக்களை ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் மேல் அர்ச்சிக்க வேண்டும். மந்திரம் சொல்ல நமக்குத் தெரியவில்லை என்றால் ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற நாமத்தைச் சொல்லலாம். பிறகு வெல்ல சீடை, உப்பு சீடை, முறுக்கு, தேன்குழல், லட்டு, திரட்டுப்பால், அதிரசம், அப்பம், வடை, பாயசம், அவல், நாட்டுச் சர்க்கரை, வெண்ணெய், தயிர் போன்றவற்றையும் , பழ வகைகளில் நாவல், கொய்யா, வாழை, விளாம்பழம் போன்றவற்றை நைவேத்தியம் செய்த பின் கற்பூரதீபம் காண்பிக்க வேண்டும்.
அன்று பகவத் கீதை, கீத கோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், க்ருஷ்ண கர்ணாம்ருதம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவற்றை வாசிக்கலாம், தங்களுக்குத் தெரிந்த ஸ்ரீகிருஷ்ணர் பாடல்களைப் பாடலாம். சிலர் தமது குழந்தைகளுக்கு பாலகிருஷ்ணன் வேடமிட்டு வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றனர்.
வீட்டில் பூஜை முடித்தபிறகு அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று இறைவனை வணங்கி, அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கண்டு மகிழலாம்.
கிருஷ்ண ஜெயந்தி பூஜை பலன்கள் :
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தினத்தில், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், ஸ்ரீமத் பகவத் கீதையில் உள்ள 'தசம ஸ்காந்தம்' படித்தால், குழந்தைச் செல்வம் தருவதுடன் சகல சௌபாக்கியங்களையும் அருளி முக்தி நலத்தையும் ஸ்ரீகிருஷ்ணர் தருவார். கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபட்டால் அவர் தன் பூரண அருளை வழங்குவதோடு அவர்களுக்கு ஏற்படும் அனைத்து சோதனைகளில் இருந்தும் பாதுகாப்பார் மேலும் அவர்களை சுற்றியுள்ள தீயசக்திகள் மற்றும் எதிர்மறை சக்திகளை விரட்டுவார். மங்களகரமான பலன்கள் அனைத்தும் கைகூடும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’
Comments
Post a Comment