அத்தி வரதர் தரிசனம் காண்போம்... அவர் அருளை பெறுவோம்.
அத்தி வரதர் தரிசனம் காண்போம்... அவர் அருளை பெறுவோம்.
ஆரூர் சுந்தரசேகர்.
ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றிற்கெல்லாம் முந்தைய மிகப் பழமையான வரலாறு கொண்டது காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்குப் பல பெருமைகள் உண்டு. தமிழ்நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே எந்த ஒரு கோயிலிலும் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இந்த கோயிலில் உள்ளன. அப்படிப்பட்ட பழங்கால புராதன பெருமை வாய்ந்த இந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அத்திவரதரை தரிசனம் செய்ய நாம் நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பாரத்வாஜ ரிஷியின் அறிவுரைப்படி பிரகஸ்பதி வரதராஜப் பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால் இங்கு வந்து வழிபட்டால் குரு பகவானால் நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் 24 ஏக்கர் பரப்பளவில் 24 நிலைகளைக் கொண்டுள்ள கோயிலில் மூலவர் வரதராஜரைப் தரிசனம் செய்ய வேண்டும் என்றால் 24 படிகள் மேலே ஏறித்தான் செல்ல வேண்டும். அத்தி வரத பெருமாள் சயன நிலையில் இருக்கும் குளத்தில் 24 படிக்கட்டுகளை கொண்டுள்ளது இந்த எண்ணிக்கை 24 என்பது காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துவ தாகும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் 1979இல் குளத்தில் இருந்து எழுந்தருளிய அத்திவரதர் தரிசனம் பற்றி கவிஞர் கண்ணதாசன் எழுதிய கீழ்கண்ட கவிதையை நினைவில் கொள்வோம்.
” நீண்டதோர் காலமாக நீரினுள் மூழ்கி நின்று
காண்பவர் வியக்கும் வண்ணம் கரை வந்த வரதன் தன்னை
மாண்புகழ் கொண்ட காஞ்சி மைந்தர்கள் வணங்கும் நாளில்
ஈண்டுலந்தின் இன்பமுற்றேன்
இறைவனின் செயலே யன்றோ! “
காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும், அத்தி வரதர் உற்சவம், இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த அத்தி வரதரை வணங்குவதால் மோட்சம் பெறலாம் என்பதால், வாழ்வில் ஒருமுறையேனும் இவரை தரிசிக்க வேண்டும் என பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர் இரண்டவாது முறையாக இந்த பெருமாளை தரிசித்தால் வைகுண்ட பதவி பெறுவார்கள் என்பது ஐதீகம். மூன்று முறை தரிசித்த சிலரும் உண்டு.
இரண்டு நிலைகள்:
01.07.2019 முதல் உலக பக்தர்களுக்கு சுமார் 47 லட்சத்திற்கும் மேல் காஞ்சியில் சயன நிலையில் காட்சியருளிய அருள்மிகு அத்திவரதராஜபெருமாள் 01.08.2019 முதல் நின்ற நிலையில் அற்புதக் காட்சி தந்து கொண்டிருக்கிறார்.
இதுவரை சுமார் ஐம்பது லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், நின்ற நிலைக்கு மாற்றப்படும் போது, ஏற்கனவே தரிசனம் செய்த பக்தர்கள் மீண்டும் வர வாய்ப்புள்ளது. அத்தி வரதரை இதுவரை தரிசிக்காமல் இருக்கும் பக்தர்களும் வருவார்கள்.
இதைத்தவிர இந்த வாரம் ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை என்பதோடு ஆடிபெருக்கு என்பதால் அன்றைக்கு பெரிய அளவில் பக்தர்கள் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் 10 ம் தேதி சனிக்கிழமையும் ஆகஸ்ட் 11ம் தேதி ஞாயிற்றுகிழமையும் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆகஸ்ட் 11ம் தேதி ஏகாதசி நாள் ஆகும். எனவே அன்றைக்கும் பக்தர்கள் கூட்டம் மிகஅதிகமாக இருக்கும்.
பாதுகாப்பு ஏற்பாடு:
ஆக., 1 முதல், அத்தி வரதரை காண, அதிகப்படியான பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுவதால் அதற்கு தகுந்தாற்போல், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதாகவும், கோவில் வடக்கு மாட வீதியில், இரு இடங்களில், பெரிய பந்தல் அமைத்து, அதில், 20 ஆயிரம் பேரை நிறுத்தி வைத்து, பின், கோவிலுக்குள் அனுப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, 70 கழிப்பறைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்:
அத்தி வரதர் தரிசனம் செய்ய தினமும் கூட்டம் அலைமோதுகின்றது. இதன் காரணமாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து அத்திவரதரை தரிசனம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கான சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட் விற்பனையை இந்து அறநிலையத் துறை இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அத்தி வரதர் வந்த நேரம் நல்ல மழையும் வந்தது:
அருள்மிகு அத்தி வரதபெருமாளை குளத்தில் இருந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்த சில தினங்களுக்குள் இரண்டு மூன்று தடவைகள் காஞ்சிபுரத்திலும் தமிழகத்திலும் பரவலாக பல இடங்களிலும் நல்ல மழை பொழிந்ததை அனைவரும் அறிவோம்
அது போன்று அத்தி வரதபெருமாளின் தரிசனம் 17.08.2019 நிறைவடையும் நாளில் நாடெங்கும் நல்ல மழை பொழிந்து எங்கும் வளமை செழிக்கட்டும் என அத்தி வரதபெருமாளை வேண்டுவோம். மீண்டும் அத்தி வரதபெருமானை தரிசிக்க இன்னும் நாற்பது வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பது இந்த நேரத்தில் அனைத்து பக்தர்களும் ஏக்கமாக இருக்கும்.
Comments
Post a Comment