கோ பூஜை செய்வோம்... நற்பலன்களை பெறுவோம்..
கோ பூஜை செய்வோம்... நற்பலன்களை பெறுவோம்...
ஆரூர் சுந்தரசேகர்.
கோ என்றால் உலகம், உலகில் உள்ள சகல ஜீவன்களுக்கும் தன் பாலை கொடுக்கும் தாய் போல் விளங்குவதால் பசுவை கோமாதா என்கிறோம்.
பகவான் பிரம்மா தனது சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவை படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தார். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனையும், காலதேவனையும் முகத்தில் இருக்க செய்தார், மற்றவர்கள் உடல் எங்கும் குடியேற செய்தார். இதில் கங்கையும் மகாலட்சுமி இருவரும் தாமதமாக வந்தார்கள். இதனால் மஹாலட்சுமிக்கும் கங்கைக்கும் பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை என்கிறது தேவிபாகவதம்.
கோமாதாவின் உடலில் இடம்பெற லட்சுமியும் கங்கையும் மிகவும் வேண்டினார்கள். எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்றனர். கோமாதாவும் உடலிலிருந்து வரும் சாணம், கோமூத்ரம் இரண்டும் யாருக்கும் சொந்தமாகவில்லை. நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில் இருக்க சம்மதித்தார்கள், அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும், கங்கையும் இருப்பதாக சாஸ்திரம். அதனால் பசுவின் சாணமும், கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது தர்ம சாஸ்திரம்.
பிரம்மஹத்தி தோஷம் இருப்பவர்கள் பசுவைத் தானமாகக் கொடுத்தால் அந்த தோஷம் எல்லாம் விலகும் என்று அதர்வண வேதம் சொல்கிறது.
கோ பூஜை சகல வித தோஷத்தை நீக்கும். அதனால்தான் கோ பூஜை மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. பசுவை வழிபட்டால் எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலனை அடையலாம் என்கிறன புராணங்கள். பல கோடி யாகங்கள் செய்த பலனும், ஏழேழு ஜென்மங்கள் தவம் இருந்த புண்ணியம் ஒரே ஒரு முறையில் கிடைத்து விடும்.
அந்த காலத்தில் முனிவர்கள் கோ பூஜையை விரும்பிச் செய்தார்கள்.
ஆதிசங்கரர் பசு தான் இந்த உலகிற்கு அன்னை என்று சொல்லி அதன் பெருமையை உலகிற்கு சொல்லி இருக்கிறார்.
பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது. முன்பு அரசர்களின் ஊர்வலங்களில், பசுதான் முதலில் செல்லும். அதிகாலையில் பசுவை தரிசனம் செய்தால், எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வீட்டில் கிரகப்பிரவேசம் செய்யும் பொழுது, கோபூஜை செய்து பசுவும், கன்றும் வீட்டிற்குள் நுழைந்த பிறகே, வீட்டினர் குடியேறுவர். இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் விலகி, சகல சம்பத்தும் கிடைக்க அது வழிகாட்டும் என்பது நம்பிக்கை.
‘பஞ்சகவ்யம்’
பால், தயிர், வெண்ணெய், கோமியம், சாணம் இந்த ஐந்தும் கலந்த கலவையே சக்தி பெற்ற ‘பஞ்சகவ்யம்’ என்று அழைக்கப் படுகிறது. வீட்டில் குழந்தை பிறந்து புண்யாகவாசனம் சடங்கு செய்யும் போது பஞ்சகவ்யம் தம்பதியருக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும்.
இன்றும் சில கிராமத்து மக்கள் கர்ப்பம் தரித்த பெண்கள் 3-ம் மாதத்தில் இருந்து பஞ்சகவ்யம் சாப்பிடுகிறார்கள்..
கோ பூஜை :
பசுவின் வாலைத் தொட்டுக் கும்பிட்டாலே வந்த தடைகள் விலகும். கோவில்களில் அதிகாலை நேரம் நடைபெறும் கோபூஜையில் கலந்து கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் இல்லத்தில் குடிகொள்ளும். மேலும் கிரக தோஷங்கள், பாவங்கள், சாபங்கள் அகல எளிய வழிபாடு கோ பூஜை தான்.
வீட்டிலேயே கோபூஜை செய்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். பசுவின் உடம்பில் அனைத்து விதமான தெய்வங்களும், தேவர்களும், முனிவர்களும், நவக்கிரகங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்யும் பொழுது அனைவருடைய பரிபூரணமான அருளும் நமக்கும் கிடைப்பதோடு, அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியடைகின்றன.
பசுவை கன்றுடன் சேர்த்து மூன்று முறை வலம் வந்து நமஸ்காரம் செய்து கீழ் உள்ள மந்திரத்தை சொல்ல நற்பலன்கள் கிடைக்கும்.
ஓம் காமதேனுவே நமஹ
ஓம் சகல தேவதா ரூபிணியே நமஹ
ஓம் மகா சக்தி ஸ்வரூபியே நமஹ
ஓம் மகாலட்சுமி வாசின்யை நமஹ
ஓம் வ்ருஷப பத்னியே நமஹ
ஓம் சௌபாக்ய தாரிண்யை நமஹ
ஓம் சர்வ ரட்சிண்யை நமஹ
ஓம் ரோஹ நாசின்யை நமஹ
ஓம் ஜய வல்லபாயை நமஹ
ஓம் க்ஷீர தாரிண்யை நமஹ
ஓம் பபிலாயை நமஹ
ஓம் சுரப்யை நமஹ
ஓம் சுசீலாயை நமஹ
ஓம் மாகா ரூபிண்யை நமஹ
ஓம் சகல சம்பத் தாரிண்யை நமஹ
ஓம் சர்வ மங்களாயை நமஹ
பின்னர் அகத்திகீரையை பசுவிற்கு கொடுக்கலாம். இதனால் சகல தெய்வங்களின் ஆசியும் பரி பூரணமாக கிடைக்கும். எல்லா திருக்கோயில்களுக்கும் சென்று வந்த புண்ணியமும் கிட்டும்.
கோபூஜை பலன்கள்:
மகாலெட்சுமிக்குரிய பூர நட்சத்திர நாளில் கோ பூஜை செய்வதால் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் குறையும்.
அமாவாசையன்று பருத்திக் கொட்டைப் பாலில் வெல்லம் கலந்து பசுவிற்கு கொடுப்பது மிகுந்த புண்ணியம். எந்தக் கிரகம் நமக்கு தீங்கு செய்கின்றதோ, அதற்குரிய கிழமையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பசுவிற்கு கொடுத்தால் கிரக பாதிப்புகள் நீங்கும்.
நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் வாழைப்பழத்தைக் கீறி, அதன்மேல் வெல்லம் வைத்து பசுவிற்கு கொடுத்து வந்தால் பிதுர் தோஷம், போன்றவை விலகி, குலம் தழைக்கும். கொஞ்சி மகிழும் குழந்தை இல்லத்தில் தவழ வேண்டுமானால் தவறாமல் கோபூஜை வழிபாட்டை மேற்கொள்வதோடு, பசுவிற்கு இயன்ற அளவு உணவோ, பழமோ கொடுத்து வர வேண்டும்.
வீடு கட்டும் போது பாதியில் நின்றாலோ, வீடு கட்டுவதில் தடைகள் வந்தாலோ அந்த இடத்தில் கோமியத்தைதெளித்து பசுவையும் அந்த இடத்தைச் சுற்றிவரச் செய்தால் இல்லம் கட்டுவதில் இருந்த தடை அகலும்.
அஷ்டமத்துச்சனி, ஏழரைநாட்டுசனி, கண்டகச் சனி போன்ற சனி ஆதிக்கங்கள் உள்ளவர்கள் சனிக்கிழமை பசுவிற்கு அகத்திக் கீரை கொடுப்பது நல்லது.
பொதுவாக ஒவ்வொருவரும் இல்லத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோமியம் தெளித்தால் கண்திருஷ்டி மற்றும் மனக்குழப்பங்கள் போய் மகிழ்வான வாழ்க்கையும், மகாலட்சுமியின் கடாட்சமும் கிடைக்கும். பசுவுடன், கன்றையும் சேர்த்து வழிபட வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான நற்பலன்கள் கிடைக்கும்.
ஓவ்வொருவரும் பூஜையறையில் கோமாதா அல்லது பசுவும் கன்றும் இணைந்த படம் அல்லது விக்ரகத்தை வைத்து வழிபட்டு நற்பலன்களை பெறுவோம்.
Comments
Post a Comment