ஆடி மாதத்திற்கு அப்படி என்ன மவுசு ...
ஆடி மாதத்திற்கு அப்படி என்ன மவுசு ...
ஆரூர் சுந்தரசேகர்.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் மிக முக்கியமானதாகவும், ஆன்மீக மாதமாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் விரதங்கள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட வேண்டியிருப்பதால் இறைவனை துதிப்பதற்கும், சிந்தனை செய்வதற்கும் ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் பண்டைக்காலம் தொட்டு தவிர்க்கப்பட்டு வருகிறது.
ஆடி மாத சிறப்பு:
'ஒரு வருடத்தின் மாதங்கள் இரு அயனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயனம் எனவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன.
மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்திராயணம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாக இருப்பதாகவும் ஜோதிட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துப் பண்டிகைகளும், விரதங்களும் தொடர்ந்து வருகின்றன.
தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி, `தேவர்களுக்கு இரவு நேரத்தின் தொடக்க மாதம்’ என்று புராணங்கள் கூறுகின்றன. இந்தக் காலத்தில், பகல் பொழுது குறைவாகவும், இரவுப் பொழுது நீண்டும் இருக்கும்.
விண்ணுலகில் இருந்த வேப்ப மரம் மண்ணுலகம் வந்த அதிசயமும் இந்த மாதத்தில் நடந்ததுதான்.
பூமாதேவி அவதரித்த மாதமாக ஆடி மாதம் சொல்லப்படுகிறது.
"அரங்கநாதனையே மணப்பேன்" என்ற உறுதியுடன் வாழ்ந்த ஆண்டாள் திரு அவதாரம் செய்ததும் ஆடிப்பூரம் திருநாளில்தான்,
கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவார். அவரது பிறந்த தினம் 'கருட பஞ்சமி" என கொண்டாடுகிறோம்.
இந்த ஆடிமாதத்தில் தான் கற்புக்கரசி “கண்ணகி” தனக்கு தவறாக நீதி வழங்கிய பாண்டிய மன்னனின் மதுரை மாநகரை எரித்ததாக வரலாறு கூறுகிறது.
பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம்.
ஆடி மாத பழமொழிகள் :
தமிழ் மாதங்களிலேயே ஆடி மாதத்திற்கு தான் அதிக பழமொழிகள் கூறப்பட்டுள்ளன.
அவற்றில் சில...
‘ஆடி பட்டம் தேடி விதை’,
‘ஆடி காற்றில் அம்மியே பறக்கும்’,
‘ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்',
‘ஆடி செவ்வாய் தேடிக் குளி அரைச்சமஞ்சள் பூசிக்குளி’,
‘ஆடிக்கூழ் அமிர்தமாகும்’,
ஆடி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்:
ஆடியில் அத்தனை நாளும் விசேஷம் தான், எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடிப்பண்டிகை, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலக்ஷ்மி விரதம், ஹயக்ரீவர் ஜெயந்தி, ஆகிய பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன.
அம்மன் ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், தீமிதித்தல், கூழ் ஊற்றுதல், போன்ற விழாக்களை நடத்தி வருகிறார்கள்.
ஆடி மாதத்தில் வரும் திருவிழாக்களை நாம் கொண்டாட வேண்டும். அதன் மூலம் வரும் பலனையும், புண்ணியத்தையும் அனைவரும் பெற்று செல்வ செழிப்போடு சிறப்பான வாழ்க்கை அமைய இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்.
ஆடித் தள்ளுபடி :
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப ஆடி மாதத்தில் விதை விதைப்பதால் வரும் மாதங்களில் பயிர் நன்றாகவே வளர்ந்து, தை மாத அறுவடையில் நல்ல பலனை கொடுக்கும். ஆகவே விவசாயி தன் கையில் உள்ள பணத்தில் நிலத்தை உழுது, விதை விதைத்து விட்டு திருவிழா காலங்களில் அவனால் நிறைய தொகை கொடுத்து மற்ற பொருள்கள் வாங்க முடியாது. அதனால் சில வியாபாரிகள் அவர்களுக்காக தள்ளுபடி விலையில் பொருட்களை கொடுக்க ஆரம்பித்தார்கள். அது இன்று வரை தொடர்கிறது.
வியாபாரிகளும் இந்த ஆடி மாதத்தில் தேக்கம் அடைந்துள்ள கையிருப்பு பொருட்களை தள்ளுபடி விலையில் பெருமளவு விற்பனை செய்துவிடுவார்கள். இதனால் வருங்கால பண்டிகைகளுக்கு அவர்கள் புதிய, மற்றும் நவீன பொருள்களை வாங்கி விற்க முடியும்.
இத்தனை சிறப்புமிக்க ஆடி மாதத்தில் இறைவனை மனமுருகி வழிபட்டு அனைத்து வளங்களையும் பெறுவோம்.
Comments
Post a Comment