ஸ்ரீசுதர்சன ஜெயந்தி...அறிந்து கொள்வோம்...
ஸ்ரீசுதர்சன ஜெயந்தி...அறிந்து கொள்வோம்...
ஆரூர் சுந்தரசேகர்.
ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீசக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீசுதர்சன ஜெயந்தி உற்சவமாக கொண்டாடப்படுகிறது.
சுதர்சன சக்கரம் என்றதும் நம் நினைவில் வருவது ஸ்ரீமகாவிஷ்ணுதான். அவரது திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். தன்னுடைய நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்சசன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கவுமோதகீ), வாள் (நந்தகம்) ஆகியவற்றையும், தோளில் வில்லையும் (சாரங்கம்) ஆயுதங்களாகத் தரித்திருப்பார். எனவே அவரை பஞ்சாயுதபாணி என்றும் போற்றுவர்.
மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களிலும் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனம் ஆகும். திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஸ்ரீ சுதர்ஸன மூர்த்தியே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர். சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்சனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் எனற பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார்.
சக்கரத்தாழ்வாரை, "வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு" என்று வாழ்த்தி பாடியுள்ளார் பெரியாழ்வார்.
திருப்பாவையில் "சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் "என்று பெருமாளை பற்றி பாடுகிறார் ஆண்டாள்.
சுவாமி தேசிகன் இவரை "சக்ர ரூபஸ்ய சக்ரிண" என்று போற்றுகிறார். அதாவது மகாவிஷ்ணுவுக்கு இணையானவர் என்று பொருள். அத்துடன் சுவாமி தேசிகன் சுதர்ஸனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார்.
சுதர்சனம் தோன்றிய விதம் :
சிவபெருமானை திருவீழிமிழலை தலத்தில் விஷ்ணு ஆயிரம் தாமரைப் பூக்களை கொண்டு தினம் அர்ச்சனை செய்து வந்தார். ஒருநாள் ஆயிரம் தாமரைப் பூக்களில் ஒன்று குறைந்தது காணப்பட்டது. அதனை அர்ச்சனையின் போது அறிந்த விஷ்ணு தன் கண்களில் ஒன்றினை தாமரையாக்கி ஆயிரம்பூவாக முழுமையான பூஜை செய்தார். அதனால் சிவபெருமான் மகிழ்ந்து சக்ராயுதத்தினை விஷ்ணுவிக்கு வழங்கினார் என்று திருவீழிமிழலை தலபுராணம் கூறுகிறது.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் கரங்களில் இருக்கும் சக்ராயுதத்தை ‘சக்கரத்தாழ்வார்’ என்னும் திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறார்.
உலகில் உள்ள எந்த தீய சக்தியையும் எதிர்த்து அழிக்க வல்லது மகா சுதர்சனம். மந்திர தந்திர யந்திர அஸ்திர சஸ்திர ஆகிய அனைத்தையும் அழித்து நல்லோரை துயரில் இருந்து காக்க வல்லது இந்த மகா சுதர்சன சக்கரம்.
புராணங்களில் சுதர்ஸனர் :
சுதர்ஸனரை பற்றி பல புராணங்களில் பெருமையாக கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரத்திலும் சக்கரத்தாழ்வாரும் உடன் அவதரித்துள்ளார்
மச்ச அவதாரத்தில் மீனாக அவதரித்த பகவானின் பல்லாகவும்
கூர்ம அவதாரத்தில் மந்தர மலையை சுதர்சனம் கொண்டே பெயர்த்து எடுக்கின்றனர்
வராக அவதாரத்தில் வராகத்தின் கொம்பாகவும்
நரசிம்மவதாரத்தில் நரசிம்மரின் நகமாகவும்
வாமன அவதாரத்தில் சுக்ராச்சாரியரின் கண்ணை குத்திய தர்ப்பையாகவும்
பரசுராமவதாரத்தில் பரசுராம அவதாரத்தில் கோடாரியாகவும்.
ராமவதாரத்தில் ராமரின் சகோதரன் பரதனாகவும்
கிருஷ்ணாவதாரத்தின் போது சிசுபாலனை வதம் செய்தது ஸ்ரீசுதர்ஸன சக்கரம்தான்
என அனைத்து அவதாரங்களிலும் சக்கரத்தாழ்வார் உடன் இருந்தவர்
‘ஆதிமூலமே’ என்றழைத்த யானை கஜேந்திரனைக் காக்க எம்பெருமான் கரத்திலிருந்து சீறிக் கிளம்பி வந்தவர் இந்தச் சக்கரத்தாழ்வார் தான்.
துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து விஷ்ணு பக்தனான அம்பரீஷனை காப்பாற்றி துர்வாசரின் கர்வத்தை அடக்கியது சக்கரமே ....
மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திட, கிருஷ்ண பரமாத்மா ,சூரியனை மறைக்க சுதர்ஸனரையே பயன்படுத்தினார்.
ஸ்ரீசக்கரத்தாழ்வார் அமைந்திருக்கும் கோலம்:
சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும்.(நெற்றிக்கண்) தலையில் அக்னி கிரீடம் தாங்கி, பதினாறு கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார்.
சக்கரத்தாழ்வார் விஷ்ணுவின் அம்சம் என்பதை உணர்த்தும் பொருட்டே அவரது திருவுருவின் பின்னால் உபதேவதையாக நரசிம்மரை இடம் பெறச் செய்தனர். ஒரு ஷட்கோண (அறுகோணம்) சக்கரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வாரின் திருவுருவையும், பின்பக்கம் திரிகோண சக்கரத்தின் (முக்கோணம்) மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யோகநரசிம்மர் அல்லது ஜ்வாலா நரசிம்மரையும் ஒருசேர தரிசிக்க ஏதுவாக, கருவறைச்சுற்றில் அமைக்கப்பட்டுள்ள சக்கரத்தாழ்வார் சன்னிதியில் கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும்.
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அவர் பின்புறமுள்ள ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால், நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும் அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திசைகளையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஸ்ரீசக்கரத்தாழ்வார் வழிபாட்டுப்பலன்கள் :
செவ்வாய்க்கிழமைகளில் இவரை வலம் வந்து வழிபட்டால், கடன் தொல்லைகள் அகலும், வியாழக்கிழமைகளில் சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து, வலம் வந்து வழிபட்டால் மனதில் எண்ணிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் தடையில்லாமல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கேற்றி,”ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம “என்று கூறி வழிபட்டாலே வாழ்வில் சுபிட்சம் காணலாம். திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்; சுமங்கலிகள் நீடூழி சுகமாக வாழ்வர்.
ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது.
இந்த சுதர்சனர். சிறைவாசம், பயம், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள் உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து அடியார்களைக் காப்பவர்
கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி யோகத்தை அருள்பவர்.
ஸ்ரீமகாவிஷ்ணு உலகில் வாழும் மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை வழங்கும் பணியை சக்கரத்தாழ்வாரிடம் கொடுத்திருப்பதாக ‘சுதர்ஸன சதகம்’ விளக்குகிறது.
ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும்.
சுதர்சனாஷ்டகம் பாராயணம் செய்வது, சுதர்சன ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கி வந்தால் நோய் நீங்கி மரணபயம் விலகும்.
கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி திருக்கோயில்:
சுதர்சனருக்கு ஸ்ரீரங்கம், திருவெள்ளறை, திருமோகூர், கும்பகோணம், தஞ்சை கோதண்டராமர் ஆலயம், மதுரை கூடலழகர் கோயில், காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாங்கூர், திருப்பதி, நாங்குனேரி, திருக்கோவிலூர், திருவல்லிகேணி உள்ளிட்ட பல்வேறு தலங்களில் தனிச் சன்னிதிகள் அமைந்துள்ளன. என்றாலும், சுதர்சனரே மூலவராக விளங்கும் தலம், கும்பகோணத்தில் உள்ள சக்ரபாணி திருக்கோயில் மட்டும் தான்.
கும்பகோணம் சக்ர படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில்தான் பிரம்மா நீராடல் செய்து யாகம் செய்தார். உடனே பாதாளத்திலிருந்து சக்கரம் வெளிக்கிளம்பி மேலே வந்தது. அந்த சக்கரத்தின் நடுவில் பிரம்மனுக்கு அன்று காட்சி தந்த ஸ்ரீமந் நாராயணன்தான் இன்று நமக்கு சக்கரத்தை கரத்தில் கொண்டு சக்ரபாணி என்றே பெயர் பெற்றிருக்கும் அப்பெருமான் சுதர்சனராகவே காட்சி தருகிறார்.
சூரிய பகவான் இங்கு வந்து வழிபட்டு அவரால் எழுப்பப்பட்ட ஆலயம் சக்ரபாணி திருக்கோயில் என்றும், அதனாலேயே குடந்தைக்கு ‘பாஸ்கர க்ஷேத்திரம்' என்று பெயர் வந்ததாகவும் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது இத்திருக்கோயிலில் கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களில் ஆயுதங்களை ஏந்தியபடி அமைத்துள்ளார் சக்ரபாணி சுவாமி. ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்ரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார். ஸ்ரீ சக்கரபாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.
இவ்வாண்டு சுதர்சன ஜெயந்தி 10-7-2019, புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் பெருமாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். பக்தர்களுக்கு அருள் புரியும் சக்கரத்தாழ்வாரை, அவரது ஜெயந்தி நாளில் வழிபட்டு ஆசிகளை பெறுவோமாக!
ஓம் நமோ நாராயணாய நம...
Comments
Post a Comment