மங்கலம் அருளும் துளசி

மங்கலம் அருளும் துளசி
ஆரூர் சுந்தரசேகர்.


   
    எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில்  முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடி தான்.
எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால் பல ஆயிரம் அமிர்த கலசங்களால்  அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன் என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார். துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்குச் சமமானதாக கருதப்படுகிறது.
நாராயணருக்கு, தினமும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்றும் பத்மபுராணம் கூறுகிறது.
சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும்  தொலையும்.

துளசி இலையின் மருத்துவ குணங்கள்:

  துளசி இலைக்கு மருத்துவக் குணங்கள் அதிகம். . துளசி இல்லாத ஆயுர்வேத் மற்றும் சித்த மருத்துவமே கிடையாது. துளசியை  தினமும் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு   குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள்  வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். துளசி ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி வராது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.  துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் பல நாட்களாக இருக்கும் படைச்சொரி மறையும். துளசி  விதையை நன்கு அரைத்து  தேவையான அளவிற்கு தண்ணீருடன்  பருகி வர சிறுநீர் கோளாறு பிரச்சினை சரியாகும். துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி  கொடுத்தால் சளி, இருமல்  பிரச்சினை சரியாகும் .

துளசி செடியை வளர்ப்பது எப்படி?

   பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
துளசியை கிழக்கு திசையில், தரைமட்டத்தில் வைத்தால், பெண்களின் ஆரோக்கியம் நன்கு அமையும். வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நற்பலனே.
துளசி  களிமண்ணில் நன்றாக வளரும்.   துளசி செடிக்கு நேரடியான சூரிய வெளிச்சம் ஆகாது. எனவே துளசிச் செடியை சூரிய வெப்பம் நேரடியாக படும் இடத்தில் வைத்து வளர்க்காமல், அளவாக வெயில் படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.
துளசி செடிக்கு அதிக ஈரப்பசையானது தேவை. எனவே கோடைகாலமாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 முறையும், குளிர்காலமாக இருந்தால், ஒருநாளைக்கும் இரண்டு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
துளசி செடியில் பூக்கள்  பூத்தவுடன் துளசிச் செடியின் இலையிலிருந்து வரும் வாசனை மட்டும் போவதில்லை, அதன் வளர்ச்சியும் தான் தடைப்படும். எனவே துளசி பூக்கள் பூத்தவுடன்  பூக்களை பறித்து விட வேண்டும்.
துளசி செடிக்கு எந்த ஒரு பூச்சிக்கொல்லி மருந்தும் தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, செடியை பூச்சிகள் தாக்காமல் தடுக்கும்.
இந்த துளசிச்செடிகளில்
நல்துளசி
கருந்துளசி
செந்துளசி
கல்துளசி
முள்துளசி
நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)
என பல இனங்கள் இருந்தாலும், கருந்துளசியும் நல்துளசியுமே முக்கியமாக கருதப்படுகிறது.

துளசி பூஜை:

பார்வதி தேவி, துளசி பூஜை செய்ததால் சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதைப்போல் துளசி பூஜை செய்ததால் தான் அருந்ததிதேவி வசிஷ்டரை மணந்தாள். ருக்மணி கிருஷ்ணரை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள். கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும், அவர் செய்த துளசி பூஜையின் மகிமையால் தான். சாவித்திரி துளசி பூஜை செய்ததால் தான் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். விநாயகர் கஜாமுக சூரனை வென்று விக்னேஷ்வரன் என்ற பட்டத்தை பெற்றதும் துளசி பூஜையால் தான்.
  துளசி பூஜை செய்யும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் . கணவருக்கு உடல்நலம் சிறக்கும் . துளசி செடி இருக்கும் வீட்டில் லட்சுமி குடியிருப்பாள் தீய சக்திகள் நெருங்காது . வீட்டில் துளசி பூஜை செய்ய மாடம் அமைத்து ஒரு வளர்பிறை சுபநாளில் பூஜையைத் தொடங்க  வேண்டும் . தினமும் காலையில் , துளசிக்கு சந்தனம் , குங்குமம் இட்டு பால் , கற்கண்டு நைவேத்யம் செய்து வணங்க லட்சுமி கடாட்சம் உண்டாகும் . வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரை நேரத்தில் கன்னிப்பெண்கள் துளசியை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் .
துளசி மந்திரம் :
நமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே
நமோ மோக்ஷப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே.
துளசி பூஜை செய்யும் சமயத்தில் இந்த மந்திரத்தை 9 முறை கூறி துளசி தேவியையும், லட்சுமி தேவியையும், மஹாவிஷ்ணுவையும் வழிபடலாம். இந்த மூலம் நமக்கு மூவரின் அருளும் ஒருசேர கிடைக்கும்.
அனைவரும் துளசி பூஜை செய்து பயன் பெறுவோமாக.

துளசியின் வேறு பெயர்கள்:

துழாய்
திவ்யா
பிரியா
துளவம்
மாலலங்கல்
விஷ்ணுபிரியா
பிருந்தா
கிருஷ்ணதுளசி
ஸ்ரீதுளசி
ராமதுளசி

தினமும் நாம் துளசி மடத்தை 21 முறை சுற்றி வலம் வந்தாலே நாம் எண்ணியது நிறைவேறும். இது அனுபவத்தில் கண்ட உண்மை.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...