நல்லதோர் வீணை செய்வோம்...
நல்லதோர் வீணை செய்வோம்...
ஆரூர் சுந்தரசேகர்.
இசைக்கருவிகள் எல்லாம் தனது இசையால் எல்லோரையும் வசீகரிக்கும். வீணையோ தனித்துவமான அழகிய தோற்றத்தாலும், தத்ரூபமான சிற்பங்களாலும் நமது மனதை இன்னும் அதிகமாக ஈர்க்கும்.
வீணை என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் கல்விக்கடவுளான சரஸ்வதிதான். இவர் கச்சபி எனும் வகையைச் சேர்ந்த வீணையைக் கொண்டு இசைக்கிறார்.
வீணை நரம்பு இசைக்கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் வெளிபடுத்த முடியும்.
"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்"
(திருவாசகம், திருப்பள்ளியெழுச்சி பாடல் எண் 4 )
"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே" (திருநாவுக்கரசர். தேவாரம், 5.90.1)
இதிலிருந்து வீணை மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் காலத்தில் வழக்கில் இருந்துள்ளதனை அறிய முடிகின்றது.
"வீணையும் நாதமும் போல நீவிர் வாழ்க" என புதுமணத் தம்பதியினரை வாழ்த்தும் முறையும் அன்று முதல் இன்று வரை தொடர்கிறது.
தஞ்சாவூர் வீணை:
பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் தான் அது தற்போது உள்ள உருவத்தை அடைந்தது.
தஞ்சாவூர் வீணைக்கு பல தனித்துவமான அடையாளங்கள் இருக்கும். வீணையின் தலைப்பு பகுதியில் யாழி என்ற மிருகத்தின் உருவம் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கும்.
வீணையின் அமைப்பு:
வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும்.
யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், மற்றும் ஒலிபெருக்கியாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.
நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும். மேலும், பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும்.
வீணைகளின் வகைகள்
வீணைகளில் முழு அளவு வீணை, நடு அளவு வீணை, சின்ன வீணை என்று மூன்று அளவுகள் உண்டு. இவற்றில் ஒட்டு வீணை, ஏகாந்த வீணை என்ற இரு வகைகள் உண்டு.
அதனைப் பற்றி பார்ப்போம்.
1. ஒட்டு வீணை:
இது இரண்டாம் தரம் என்றாலும் சில சமயம் நன்கு செய்த ஒட்டு வீணை ஏகாந்த வீணை மாதிரி நன்றாகவே இருக்கும். ஒட்டு வீணை தனித்தனியாகப் பிரித்துச் சேர்க்கும் வகையில் இருக்கும். இது ஓர் அளவுக்குச் சுலபமாக வீணையை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல ஏதுவாக இருக்கும். ஆனால் ஒன்றை ஒன்று இணைந்து நன்கு பொருந்திஇருக்கவேண்டும்.
2. ஏகாந்த வீணை:
நல்லதொரு ஏகாந்த வீணை 130” லிருந்து 150” வரை சுற்றளவுள்ள, மற்றும் 6 லிருந்து 7 அடி வரை உயரமுள்ள மரத்திலிருந்து நடுவில் வெட்டி குறை இல்லாமல் கடைந்து எடுத்து ஒரு முழு வீணையாக செய்ய வேண்டும். அதாவது குடத்திலிருந்து தண்டி பாகம் வரையிலோ, அல்லது குடத்திலிருந்து யாளி வரைக்குமோ இருக்கும்.
வீணை செய்யும் விதம்:
வீணை செய்யும் தொழில் தஞ்சாவூரில் சிறப்பாக நடைபெறுகிறது.
தஞ்சாவூர் வீணை எட்டு கிலோ வரை எடை இருக்கும். இதன் மொத்த நீளம் 52 இஞ்ச். பானையோட அகலம் 15 இஞ்ச்... உயரம் 12 இஞ்ச். தஞ்சாவூர் வீணையில மட்டும்தான் விதவிதமான சிற்பங்கள் தத்ரூபமாக செதுக்கப்பட்டிருக்கும். தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும்.
வீணை செய்வதற்கு முக்கியமாக பலாமரத்தையே உபயோகிக்கிறார்கள். மரத்தை பண்ருட்டியில் இருந்து வாங்குகிறார்கள். ஒரு பெரிய பலா மரத்தில் இருந்து ஆறு வீணைகள் வரை செய்யலாம். சரஸ்வதி வீணை, ஏகாந்த வீணை என்ற இரண்டு வகையான வீணைகள் தஞ்சாவூரில் செய்யப்படுகின்றன.
வீணைக்கு செயற்கையாக வண்ணம் தீட்டுவதில்லை. பலாமரம் பால்வகை மரம். நாளாக நாளாக அதுவே மெருகேரும். புதிய வீணையின் எடை மரம் காயும்போது குறையத்தொடங்கும். அப்போது சுருதி சுத்தமாக இருக்கும். ஒரு வீணையை செய்து முடிக்க சுமார் 20 நாட்கள் ஆகும்.
தஞ்சாவூர் நகரம் மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதியில், வீணை தயாரிக்கும் பணியில், 150 கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு சுமார் 2,000 வீணைகள் செய்யப்படுகின்றன
வீணை தயாரிப்பில் நுட்பமான வேலை 'சுரஸ்தானம்' அமைப்பதுதான். இசை ஞானம் உள்ளவர்களால்தான் இதை செய்ய முடியும்.
தஞ்சாவூரில் தயாராகும் வீணைகள் ஒவ்வொன்றும் 4,500 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வீணைகள் 8,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய்வரை விலை போகிறது.
தஞ்சாவூர் வீணையின் பெருமை:
தஞ்சாவூர் வீணையை மீட்டுவது பெரும் பாக்கியமாகவும், கவுரமாகவும், இசைக் கலைஞர்கள் நினைப்பது பெருமைக்குரியது. சில வீடுகளில் இசைக்க தெரியாவிட்டாலும் தஞ்சாவூர் வீணை வைத்திருப்பதே பெருமை என்று நினைக்கிறார்கள். இந்தியா மட்டுமல்லாது, பிரான்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.
தஞ்சையில் தயாரித்து உலகம் முழுவதும் உலா வரும் வீணைக்கு புவிசார் குறியீடு (Geographical indication) வழங்கி, பெருமைப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
வீணை இசைக்கு பெருமை சேர்த்த பல புகழ் பெற்ற வீணை இசைக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
வீணை தனம்மாள்
வீணை சிட்டிபாபு
எஸ். பாலச்சந்தர்
வீணை காரைக்குடி சாம்பசிவ ஐயர்
ஆர். பிச்சுமணி ஐயர்
ஈமணி சங்கர சாஸ்திரி
வீணை காயத்ரி
வீணை என்றாலே தஞ்சை தான் நினைவுக்கு வரும். தஞ்சாவூர் வீணை தான் பிரசித்தி பெற்றவையாக இன்னும் விளங்கி வருகிறது.
Comments
Post a Comment