விபூதியை அணிவோம்...அதன் பலனை பெறுவோம்...

விபூதியை அணிவோம்...அதன் பலனை பெறுவோம்...
ஆரூர் சுந்தரசேகர்.


விபூதி இந்துக்கள்  நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐஸ்வர்யம் என்று அழைக்கப்படும்.
"நீறில்லா நெற்றி பாழ்!" என்கிறார் அவ்வையார்.  விபூதிக்கு திருநீறு என்று ஒரு பெயருண்டு.
"மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே"
திருநீறு இட்டுக் கொள்ளும் பெருமையை திருஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகத்தில் பதினோரு பாடல்களில் பாடியுள்ளார் மேனியெங்கும் பால் வெண்ணீறைப் பூசியிருப்பதாக சிவனை தேவாரம் போற்றுகிறது.
  "பூதி அணிவது சாதனம் ஆதியில்
  காதணி தாமிர குண்டலம் கண்டிகை
  ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம்
  தீதில் சிவயோகி சாதனம் தேரிலே."
என்கிறார் திருமூலர்.
இப்பாடல் சிவனடியார்கள் அணிய வேண்டிய முக்கிய சிவ சின்னங்கள் மூன்று  அதில் திருநீறு முதலாவதும் இரண்டாவதாக செம்பிலான குண்டலத்தை காதிலும்
உருத்திராக்க மாலையை கழுத்திலும் அணிய வேண்டும் என கூறியுள்ளார்.
“பூசுவதும் வெண்ணீறு” என்று திருவாசகம்-திருச்சாழலில் பாடியுள்ளார்  மாணிக்வாசகர்.
பகவத்கீதையின் 10-வது அத்தியாயம் பகவான் கிருஷ்ணரின் மகிமைகளைப் போற்றும் பகுதியாக விபூதி யோகம் என்ற பெயரிலேயே அமைந்திருக்கிறது.
விபூதியை, ஜபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம்... எனப் பல்வேறு பணிகளுக்காகப் பயன்படுத்திய விதத்தை `அகத்தியர் பரிபூரணம்' என்ற நூலில் அகத்தியர் விளக்கியிருக்கிறார்.
ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என்று சொல்லி திருநீறு அணிவது தேவாரம், திருவாசகம், திருமந்திரம் அடங்கிய பன்னிரண்டு திருமுறைகளை பாடிய பலனைத் தரும்.
     விபூதி காமதேனு என்ற தெய்வீக பசுவின் வழியில் தோன்றிய பசுக்களின் மூலம் கிடைக்கப் பெற்ற   சாம்பலே புனித திரு நீறாகும். இதனால் இந்து சமயத்தில் பசுக்களை கோமாதா என்று போற்றி வழிபடுகின்றனர்.
   ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது வெறும் சாம்பலே  என்பதை திருநீறு (விபூதி) குறிக்கின்றது.

திருநீறின் வேறு பெயர்கள்:
திருநீற்றை விபூதி, பஸ்மம், பசிதம், சாரம், இரட்சை என்றும் அழைக்கிறார்கள்.
அருட்செல்வத்தை வழங்குவதால் விபூதி என்று கூறப்படுகிறது.
பாவங்களையும் சாம்பலாக்குவதால் பஸ்மம் என்று அழைக்கப்படுகிறது.
இருளாகிய அறியாமையை அகற்றி ஆன்ம ஓளியை கொடுப்பதால் பசிதம் என்று வழங்கப்படுகிறது.
அனைத்து குற்றங்களையும் போக்குவதால் சாரம் என்ற உயர்பொருளில் அழைக்கப்படுகிறது.
துன்பங்களிலிருந்து காத்து மனத்தெளிவைத் தருவதால் இரட்சை என்று கூறப்படுகிறது.
நான்கு வகை திருநீறு:
1. கல்பம்
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் அக்னியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு.
2. அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு..
3. உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் தீயில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு..
4. அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு..

வீட்டில் விபூதி தயாரிக்கும் முறை:
    பசுஞ் சாணத்தால் வரட்டி தட்டி, வீட்டில் அக்னி வளர்த்து அதில்  சாண வரட்டிகளை போட்டு அது சுமார் ஒரு நாள் முழுவதும் நன்கு எரிந்து அதன் கறுப்பு நிறம் மாறி வெண்மையாக மாறும். அதை சலித்து சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதுவே விபூதி தயாரிக்கும் முறை. பொதுவாக விபூதியில் வேறு எந்தப் பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. (மேற்கண்ட முறையில் திருநீறு தயாரிக்க இயலாவிட்டால், சுத்தமான பசுஞ்சாணம் கொண்டு திருநீறு தயாரிக்கும் பல கோசாலைகள் மூலமாகவும் வாங்கிக்கொள்ளலாம்)

விபூதியை உடலில் பூசிக் கொள்ளும் முறைகள்:
    வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று, விபூதியை எடுத்து கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிரவிரல் ஆகியவற்றால் எடுத்து அண்ணாந்து, நெற்றியில் நாம் வணங்கும் தெய்வங்களின் பெயர்களை சொல்லி அணிந்துகொள்ள வேண்டும்.
  கைகளால் அப்படியே அள்ளி நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக்கொள்ளும் முறை `உள் தூளனம்.’
    ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என மூன்று விரலால் இடைவெளி விட்டு மூன்று கோடுகளாக விபூதியை  பூசிக் கொள்ளும் முறை "திரிபுண்டரீகம்"
    காலை, மாலை, மற்றும் இரவு படுக்கப் போகும்போதும், வெளியே கிளம்பும்போதும் விபூதியை  பூசிக் கொள்ள வேண்டும். ஸ்வாமி, குரு, பெரியவர்கள் முன்பு அவர்களைப் பார்த்தபடி முகத்தைத் திருப்பி நின்று விபூதி அணிய வேண்டும்.

மருந்தாக விபூதி :
     மனித உடலில் நெற்றி ஒரு முக்கியமான ஸ்தானம். புருவ மத்தியை வசியப்படுத்தி பல வகை சித்துகளை செய்ய முடியும் என்பது ஞானியர் வாக்கு. நெற்றியின் மையத்தைக் காப்பதற்காகவே விபூதி அணியப்படுகிறது. ஆக்ஞா, விசுத்தி சக்கரங்களை பாதுகாத்து ஆன்ம ஒளியைப் பெருக்குவது விபூதி.
  பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டச் செய்யும் நெற்றியைச் சீர்படுத்தவும், சூரியக் கதிர்களின் சக்திகளை நெற்றி வழியாக உள்ளே செலுத்தவும் திருநீறு பயன்படுகிறது என்று விஞ்ஞான பூர்வமாக கூறப்பட்டுள்ளது.
  குளித்தவுடன் தலையில் இருக்கும் நீரைப் போக்கி தலைவலி, ஜலதோஷத்தை தடுக்கும் தன்மை விபூதிக்கு உண்டு. 
இதனை நமது தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் தடவிக் கொள்ள  அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். இதனால், எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும்.
விபூதியை அணிவதால் கிடைக்கும் பலன்கள்:
   விபூதியை அணிவதால், மனதில் இறைபக்தி மேலோங்கி, நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்கள் விலகி  நல்ல எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். இம்மை, மறுமைகளில் செய்த பாவங்கள் விலகும். உடல் மற்றும் உள்ளத்தில் புத்துணர்ச்சி ஏற்படுத்தும். உடம்பில்  இரத்த ஓட்டத்தை சீராக்கி உடலினை நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
    இன்றைய  இளைய தலைமுறையினருக்கு விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்வது பற்றியும் அதன் பயன்களை அவசியம் எடுத்துரைக்க வேண்டும்.
   விபூதி அணிவதன் பயன்கள், அணியும் முறைகள் பற்றி அறிந்த நாமும்  முறைப்படி விபூதியை அணிவோம்.
விபூதி அணிந்து அதன் பலனை பெறுவோம்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...