வைகாசி விசாகம்... தமிழ்க் கடவுள் முருகனுக்கு விசேஷம்...

வைகாசி விசாகம்... தமிழ்க் கடவுள் முருகனுக்கு விசேஷம்...
ஆரூர் சுந்தரசேகர்.


வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரம் தான்  முருகனின்  ஜென்ம நட்சத்திர தினமாகும்.
      ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று  முறையிட்டனர். சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து தேவர்களை  காத்தருள  தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்து ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. அந்த ஆறு குழந்தைகளை வளர்க்க மகாவிஷ்ணு  ஆறு கார்த்திகை பெண்களை நியமித்தார். கார்த்திகைப் பெண்கள் குழந்தைகளை  பாலூட்டி, சீராட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள்  குழந்தைகளை காண  சிவனும், பார்வதியும் சரவணப் பொய்கைக்கு   சென்றிருந்த போது பார்வதிதேவி  அங்குள்ள  அந்த ஆறு குழந்தைகளையும் எடுத்து அணைத்துக் கொள்ள, அந்த ஆறு குழந்தைகளும்  ஆறு முகங்கள், பன்னிரண்டு கண்கள் மற்றும் பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே உடலைக் கொண்ட  குழந்தையாக மாறியது. இதனால் முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற பெயரும் ஏற்பட்டது. 
முருகனுக்கு  வேறு பெயர்கள்:
தமிழ்க்கடவுள் முருகனுக்கு  பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அற்புதமான அர்த்தங்களும் உண்டு அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
     முருகன் எனும் தமிழ் கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாது  இந்தியாவின் பல பகுதிகளிலும் சுப்பிரமணியர் மற்றும் ஸ்கந்தன் என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகன் ஆகவும், சரவணப் பொய்கையில் அவதரித்ததால் சரவணன் என்றும்,  சிவனுக்கு மந்திர உபதேசம் செய்ததால்  “சிவகுருநாதன்” என்றும்,   ஞானமே வடிவானவர் என்பதால் ஞானஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறார். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால்  விசாகன் என்றும் அழைக்கப்படுகினறார். கார்த்திகை பெண்கள் முருகப்பெருமானை வளர்த்ததால் “கார்த்திகேயன்” என்ற பெயரும் அவருக்கு உண்டு.   சங்க இலக்கியத்தில் அவரை சேயோன்  என்றும்  குறிப்பிட்டு உள்ளார்கள். சிவன் சக்திக்கு  இடையில் முருகன் அமர்ந்த திருக்கோலத்தை சோமாஸ்கந்தன் என்று அழைக்கப்படுகிறார்.
விழாக்கள்:
வைகாசி விசாகம் விழாக்கள்  எல்லா முருகன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  இத்தினத்தில்   சில கோயில்களில் தேர்த் திருவிழா மற்றும் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறுகின்றது.
  பக்தர்கள் பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல், பாதயாத்திரை செல்லல் போன்ற வேண்டுதல்களை இந்நாளில் நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.
வைகாசி விசாகத்தின் சிறப்பு:
    வைகாசி விசாகம் முருகனின் அவதார நாளாகக் கொண்டாடப்படுகிறது.
  பன்னிருஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த தினமும் இந்நாளே ஆகும்.
    பஞ்ச பாண்டவரில் ஒருவனான அர்ச்சுனனுக்கு சிவபெருமான் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கிய நாள் வைகாசி விசாகமாகும். 
  எமதர்ம ராஜனின் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான்.
  வடலூரில் இராமலிங்க அடிகளார் சத்யஞான சபையை நிறுவியதும் இந்நாள் தான்.
  சித்தார்த்தர் என்னும் கௌதம புத்தர் பிறந்த நாளும், அவர் ஞானத்தை அடைந்த நாளும் வைகாசி விசாகமே ஆகும்.   ‘புத்த பூர்ணிமா’ என்று இதனை அழைத்து மாபெரும் சிறப்புடன் கொண்டாடுகின்றனர்.
வைகாசி விசாகம் அன்று செய்ய வேண்டியவை:
வைகாசி விசாகத்தில்  முருகப் பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. புத்திரதோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் மழலைச்செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
வைகாசி விசாகம் அன்று திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம் ஏதேனும் ஒன்றை காலையிலும், மாலையிலும் படிக்கலாம். முடியாதவர்கள் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ‘ஓம் சரவணபவ’ அல்லது  ஓம் முருகா’ ஆகிய ஏதாவது ஒன்றை சொல்லலாம்
   அன்று முருகன் கோவிலுக்குச் சென்றும்  வழிபாடு செய்யலாம். மற்றும் வரும் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், தயிர் சாதம்  ஆகியவை வழங்கலாம்
முருகனின்  அவதார திருநாளான  இந்த நன்னாளில் அவரை துதிசெய்து அபிஷேக, ஆராதனைகளை கண்டுகளித்து  சகல யோகங்களும் பாக்யங்களும் பெறுவோமாக.
கந்தனுக்கு அரோகரா – முருகனுக்கு அரோகரா – வேலனுக்கு அரோகரா!
இந்த ஆண்டு(2019) வைகாசி விசாகம் மே மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...