குங்குமம் என்றும் ஒரு மங்களச் சின்னம்....

குங்குமம் என்றும் ஒரு மங்களச் சின்னம்....
ஆரூர் சுந்தரசேகர்.


   பல நூற்றாண்டுகளாய்  சாஸ்திர சம்பிரதாயமாக ஆன்மீகத்தில் முதலிடத்தைப் பெறுவது குங்குமம்.
ஹிப்நாட்டிஸ சக்தியை முறியடித்து,நரம்புகளின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தி வைட்டமின் 'டி' போன்ற சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை பயக்குவதும் குங்குமம்.
அழகு சாதன வரிசையிலும் நெற்றிப் பொட்டில், எந்த  வடிவத்தில் இருந்தாலும், உலக நாகரிகத்திற்கு இந்திய கலாசாரத்தை அடையாளப்படுத்துவதும் குங்குமம்
இப்படி  ஆன்மிகம், அறிவியல், அழகு இம் மூன்றிற்கும் உரியது குங்குமம் மட்டும் தான்.
அன்று முதல் இன்று வரை குங்குமம்:
   குங்குமம் பயன்படுத்தும் விதத்தை  லலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் சௌந்தர்ய லஹரி உட்பட பல பண்டைய புராணங்கள், மத நூல்கள், வேதங்கள்  மற்றும் கதைகளில் கூட குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சில...
"உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்"  ...அபிராமி அந்தாதி
  ஹனுமான் ஒருமுறை சீதை குங்குமம் இட்டுக் கொள்வதைப் பார்த்து, ஆர்வத்தோடு `தாயே, குங்குமத்தின் பலன் என்ன?` என்று கேட்க, சீதை தன் கணவர் ஸ்ரீ ராமனின் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக குங்குமம் இட்டுக் கொள்கிறேன் என்று சொன்னவுடன் உடனே  தன் உடல் முழுதும் குங்குமம் பூசிக் கொண்டார் என்கிறது இராமசரித்மானஸ்.
திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இந்த வகையில் இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இட்டு மகிழ்வர்.
நேபாள நாட்டு இந்து பெண்களும் குங்குமத்திற்கு அதிகமாக மதிப்பளிக்கிறார்கள்   நேபாளத்தில் குங்குமத்துக்கு இன்றும் தனி மதிப்பு உள்ளது.
நெற்றியில் குங்குமத்தை வைக்கும் முறைகள்:
  குங்குமத்தில் ஸ்ரீமஹா லக்ஷ்மி அமர்ந்து இருப்பதால் பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீமஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுவர்.
மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.
குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும்.
திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் இடுவது சிறப்பு.
பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
மதுரை மீனாட்சி கோயில் குங்கும மகிமை:
எல்லா கடவுள்களின் நெற்றி முதல் திருப்பாதங்கள் வரை ஆளுமை செய்யும் குங்குமம்  அம்மன் கோயில் பிரசாதங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. உலகெல்லாம் மதுரையின் ஆன்மிக சான்றாக திகழும் மீனாட்சி குங்குமம் முக்கியத்துவம் வாய்ந்தது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம், அம்மனின்  பிரசாதமாக   அருளாசியாக இட்டுக் கொள்வதை பெரும் பாக்கியமாக புனிதமாக பக்தர்கள்   நினைக்கின்றனர்.
மதுரை மீனாட்சி கோயிலில் புதுமண்டபத்தை சுற்றியுள்ள கடைகளின் பெரும் வியாபாரம் மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு  வளையல்கள் தான். இங்கு இரண்டு கலர்களில் குங்குமம் கிடைக்கிறது. ஒன்று சிவப்பு மற்றொன்று அரக்கு (மெரூன்). 1960 ஆண்டு வரையிலான காலக்கட்டம் வரை குங்குமம் என்றால் அது சிவப்பு கலராக மட்டுமே கிடைத்தது. அதன் பின் தான் மெரூன் கலரில் தயாரித்து  அதிலும் தாழம்பூ வாசனை 1975 ம் ஆண்டுக்கு பின் தான் பிரபலமானது. தற்போது குங்குமம் என்றால் அது தாழம்பூ குங்குமம் என்ற அளவிற்கு மக்கள் மனங்களில் இடம் பெற்றுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில்  மரத்தில் உள்ள குங்குமச்சிமிழ்  ஸ்பெஷல். இது ஈரத்தன்மைக்கு எதிரானது. அதனால் மரக்குங்குமச்சிமிழில் வைத்திருக்கும் குங்குமம் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும்.
நம் வீட்டிலேயே குங்குமம் தயாரிப்பது எப்படி?
    குங்குமம் தயாரிக்க தேவையான பொருட்கள்: குண்டுமஞ்சள் 100 கிராம் வெண்காரம் 10 கிராம், படிகாரம் 10 கிராம், நல்லெண்ணெய் தேவையான அளவு,எலுமிச்சை சாறு அரை மூடி, வெண்காரம், படிகம் இரண்டையும் உடைத்து தனித்தனியாக மிக்சியில் பொடியாக்க வேண்டும். அதன் பின் மிக்சியில் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதன் நிறம் பழுப்பு நிறமாக ஈரப்பசையுடன் இருக்கும். மஞ்சளை நறுக்கி பொடித்து சல்லடையில் சலித்து எடுக்கவும். எலுமிச்சை சாறுடன் அரைத்து வைத்த வெண்காரம், படிகத்தை கலந்து வைக்கவும். இந்த கரைசலுடன் மஞ்சள் பொடியை கலந்து பித்தளை தட்டு அல்லது மண் சட்டியில் . உலரவிடவும். நன்கு உலர்ந்த பின் செங்கல் நிறத்தூளில் இருக்கும். அதில் சிறிது சிறிதாக நல்லெண்ணெய் சேர்த்து பிசிறி விடும் போது, மஞ்சள் வாசனையுடன் டார்க் மெரூன் நிறத்தில் குங்குமம் கிடைக்கும். நல்லெண்ணெய் அதிகம் சேர்த்தால் மஞ்சள் வாசத்திற்கு பதில் நல்லெண்ணெய் வாசம் வரும். தாழம்பூ, மல்லிகை வாசனை தேவையெனில் இதன் எசன்ஸ்களை இரண்டு மூன்று துளி சேர்த்தல் விரும்பும் வாசனை கிடைத்து விடும்.
பக்குவத்தை மீறி வெண்காரம் படிகாரம் அதிகமாகி விட்டால் - நெற்றியில் அரிப்பு ஏற்படும்.. கவனமும் பொறுமையும் மிக அவசியம்..
அம்மனுக்கு  குங்கும அர்ச்சனை:
நாமே வீட்டில் - குங்குமத்தால் - அம்மனுக்கு உரித்தான  நூற்றெட்டு திருப்பெயர்களைச் சொல்லி அர்ச்சனை செய்து - அந்தக் குங்குமத்தையே இட்டுக் கொள்ளலாம். நம் கையால் அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமம் மிகுந்த சக்தி வாய்ந்ததாகும்.
குங்குமம் சுமங்கலி பாக்கியத்தைக் கொடுக்கும், எனவே வெள்ளி, செவ்வாய் மற்றும் விஷேச நாட்களில் அம்மன் கோவில்களில் குங்கும அர்ச்சனை நடைபெறும் போது கலந்து கொண்டால் குடும்பத்தில் அமைதி பெருகும். குங்குமத்தினை கொண்டு அம்மன் பாதகமலங்களில் அர்ச்சனை  செய்தால் பலவித யாகங்கள்,தானங்கள் செய்த பெரும் புண்ணிய பலன்கள் பெறுவர்.
குங்குமம் தான் அம்மன் சந்நிதியில் வழங்கப் பெறும் மிக உயர்ந்த பிரசாதமாகும். அம்மன் கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றாமல் வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடுவதால், தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.
தெய்வீகத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக  தேஜஸ் கிடைக்கும். தீய எண்ணங்கள் நம்மை நெருங்காது.
கோயிலுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர் பெறுபவர் இருவரும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெறுவர்.
குங்குமம் காலகாலமாக நம் பாரத மங்கையர்-கனவிலும் நினைவிலும் போற்றி வணங்குகின்ற புனித தன்மையை கொண்டது. எனவே நற்பலனை அள்ளி தரும்  தரும் குங்குமத்தை  நெற்றியில் இட்டு சிறப்பு சேர்ப்போம்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...