அன்னையர் தினத்தை நாம் தினந்தோறும் கொண்டாடுவோம்...
அன்னையர் தினத்தை நாம் தினந்தோறும் கொண்டாடுவோம்...
ஆரூர் சுந்தரசேகர்.
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை என்பது பழமொழி. தாயை தெய்வமாக மதிப்பவனுக்கு அனைத்து தெய்வங்களும் அருள் புரிவார்கள்.
கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்கு மெய் (உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்த பின்பு அதை உலகத்தில் உயிர்மெய்யாய் குழந்தையை பெற்றெடுக்கிறாள். இதை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் சேர்ந்து உருவானது 'அம்மா' என்ற தமிழ் சொல். வேறு எந்த மொழியிலும் இதை போன்ற வார்த்தைகள் இல்லை.
‘அம்மா’ என்ற வார்த்தைக்கு ஜாதி, மத, மொழி, இன, நாடு, பண பேதம் பார்க்கவே முடியாது..
உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.
உலகில் ஒருவருக்கு விலை உயர்ந்ததாகத் தோன்றும் ஒரு விஷயம் மற்றொருவருக்கு ஒன்றுமில்லாததாகத் தோன்றும். அதற்கு அவரவர் எண்ணங்களும் வாழும் சூழ்நிலையே காரணமாக இருக்கலாம் ஆனால் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் மதிப்பிட முடியாத ஒரு விஷயம் “அம்மாவின் அன்பு”
இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு மட்டும்தான்.
தாய் தன் பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் என்றும் குழந்தைகளாக பார்க்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி, வேறு எதிலும் இருக்காது.
மாதா, பிதா, குரு தெய்வம் என்ற வரிசையில் அன்னையை முதலில் வைத்தது ஏனென்றால் அன்னை என்பவள் அத்தனை பேரையும் விட உயர்ந்தவள் என்பதாகும்.
அன்னையர் தின வரலாற்றைப் பார்ப்போம்:
அன்னையின் தியாகங்களை நினைவு கூற உலக நாடுகள் எங்கும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை, அன்னையர்தினமாக அனுசரித்து கொண்டாடுகிறது.
அமெரிக்காவில் வாழ்ந்த அன்னா மரியா ஜார்விஸ் என்ற பெண்மணியின் என்பவரால் தான் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில் முதன் முதலில் அன்னையர் தினம் 1908ம் ஆண்டு துவக்கி வைத்து கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், இத்தினத்தை கொண்டாடுகின்றன. சிறந்த சமுதாயத்தை உருவாக்க அன்னையர்களின் பங்களிப்பு முக்கியமானது.
சகோதரியாக, தாயாக, மகளாக, தாரமாக, தோழியாக வீட்டில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் ஆசிரியை... இப்படிப் பெண், தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும், அன்னை என்ற பாத்திரமே உன்னதமானது, உலகில் ஈடு இணையற்றது. நம்மை உலகுக்கு அடையாளம் காட்டிய அன்னையை, எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது. வயதான காலத்திலும், அன்போடு நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, மே 2வது ஞாயிறு கிழமை, உலக அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினம் என்றால் பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்து பரிசுப் பொருள்கள் வாங்கி தாயாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதல்ல.வருடம் முழுவதும் குழந்தைகளுக்காகவும், குடும்பத்தினரின் நன்மைக்காகவும் உழைத்துக் கொண்டே இருக்கும் அன்னையின் அன்பை அன்னையர் தினத்தன்றாவது நினைத்துப் பார்த்து நாம் நம் அம்மாவுடன் முழு நாளையும் சந்தோஷமாக செலவழிக்கலாம். அம்மாவிற்கு தேவையான உதவிகளை வீட்டில் செய்து கொடுக்கலாம். அன்று முழுவதும் அவரின் அன்பு மழையில் நனைந்து கொண்டேயிருக்கலாம்..
நம்மைச் சீரும் சிறப்புடனும் வளர்த்த தாயை, எப்பொழுதும் அன்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அத்தாயின் உள்ளம் மகிழ்ச்சி அடையும். நாமும் மனநிம்மதியுடன் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். உலகில் நமக்கெனப் பல உறவுகள் இருந்தாலும், நம் முன்னேற்றத்தைக் கண்டு பெருமிதம் அடைவது தாய் மட்டும்தான். எனவே, நம்மைச் சீராட்டிப், பாலூட்டி வளர்த்த தாயை நாம் எப்பொழுதும் ‘கண்ணை இமை காப்பது போலக் காத்துப் போற்றுவோம்.
எந்த ஒரு சேயும் தெய்வத்துக்கு நிகரான தன் தாயை இறுதிக்காலம் வரை மதித்து, மகிழ்வித்து எந்தவித சூழ்நிலையிலும் அவர்களை கைவிடாது ஒன்றிணைந்து வாழ்வோம் என்று அன்னையர் தினத்தன்று உறுதி மொழி எடுத்துக் கொள்வோம்.
இந்த ஆண்டு (2019) மே 2வது ஞாயிறு கிழமை, (12/05/2019) அன்று உலக அன்னையர்தினம் கொண்டாடப்படுகிறது.
Comments
Post a Comment