தங்க நகை வாங்குவது மட்டும்தானா அட்சய திருதியை....
தங்க நகை வாங்குவது மட்டும்தானா அட்சய திருதியை....
ஆரூர் சுந்தரசேகர்.
சமீப காலமாக அட்சய திருதியை என்றாலே தங்க நகைகள் வாங்குவது தான் என்று அனைத்து மக்கள் மனதிலும் பதிந்து விட்டது.
"அட்சயா" என்றால் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது என்று பொருள், மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் நாளாகும்.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை 'அட்சயதிரிதியை’ திருநாளாக நாம் கொண்டாடுகின்றோம். அக்ஷய திரிதியையை சத்தீஸ்கரில்‘அக்தி’ என்றும் குஜராத் மற்றும் ராஜஸ்தானில் ‘அக்த தீஜ்’ எனவும் கொண்டாடுகிறார்கள்.
வங்காளத்தில், அட்சய திருதியை "அல்கதா" எனும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அது விநாயகர் மற்றும் லட்சுமியை வணங்கி புதிய வணிகக் கணக்குப் புத்தகம் எழுதத் தொடங்கும் நாளாகும். இந்த நாள் ஜாட் எனப்படும் விவசாய சமூகத்திற்கும் மிக மங்களகரமான நாளாகும்.
அட்சய திருதியை பற்றிய புராணத்தில் கூறும் பெரும் சிறப்புகள்:
பிரம்மா படைக்கும் தொழிலை ஆரம்பித்தது இந்த நாளில்தான்.
திருமாலின் அவதாரமான பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான்.
ஸ்ரீஅன்னபூரணியிடம் சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு பிட்சை பெற்றது இந்த நாளில்தான்.
கிருஷ்ண பகவானுக்கு, அவல் கொடுத்து குசேலன் அனைத்து ஐஸ்வர்யங்களை பெற்றதும் இந்த நன்னாளில்தான்.
பஞ்ச பாண்டவர்கள் சூரிய தேவனிடமிருந்து அள்ள அள்ளக் குறையாக அட்சய பாத்திரத்தைப் பெற்றதும் இன்நன்நாளே.
திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.
குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம் இன்றுதான்.
அட்சய திருதியை நாளில் தான் திரேதா யுகம் தொடங்கியதாக புராணங்கள் கூறுகிறது.
பகீரதன் தவம் செய்து கங்கையை பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான்
அட்சய திருதியை அன்று தான் வேத வியாசர் மகாபாரதம் எழுதத் தொடங்கினார்.
அட்சய திருதியை நாளில் செய்ய வேண்டியவை:
அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்று பண்டைய தமிழ் நூல்களில் கூறப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் படிப்பை தொடங்குவது, மற்றவர்களுக்கு உதவி செய்வது நல்ல பலனளிக்கும் என வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி,வைர நகைகள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகும். இதைத்தவிர பூமி பூஜை போடுவதற்கும் புதிய தொழில் தொடங்குவதற்கும் இந்த நாள் உகந்தது.
அட்சய திரிதியை அன்று நாம் என்ன வாங்கலாம் ?
அட்சய திரிதியை அன்று மஹாலட்சுமி வாசம் செய்யும் பொருட்கள் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். அது தங்கம், வெள்ளி மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு, மஞ்சள் ஆகியவற்றையும் நாம் வாங்கலாம்.. இதைத்தவிர புதிய வாகனம், புதிய ஆடைகள் வாங்க சிறந்த நாள்.
தங்கம். வெள்ளி வாங்க இயலாதவர்கள் ஒரு பாக்கெட் உப்பு மட்டுமாவது வாங்கலாம்.
வழிபாடுகள்:
அட்சய திருதியை அன்று லட்சுமி பூஜை மற்றும் குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும் என்றும் இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, சுவாமி படத்தின் முன்பாக சிறிய தொகையை வைத்து வழிபாடு செய்யலாம்.
தொட்டதெல்லாம் துலங்கும் இந்த நன்னாளில் வெறும் பொருள் சேர்க்கையை மட்டும் மனதில் கொள்ளாமல் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் வசதியற்றவர்களுக்கு நம்மால் முடிந்த தான தர்மங்களை செய்வது தான் உண்மையான அட்சய திருதியை ஆகும்.
இந்த ஆண்டு அட்சய திருதியை வரும் மே மாதம் 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது.
இந்த நந்நாளில் அழியாத செல்வமான புண்ணியங்களைச் நாம் சேகரிப்போம்.
Comments
Post a Comment