அக்னி நட்சத்திரமும்...அபூர்வ தகவல்களும்...
அக்னி நட்சத்திரமும்...அபூர்வ தகவல்களும்...
ஆரூர் சுந்தரசேகர்.
முன்னோர்களின் வானியல் கணக்கின்படியும், ஜோதிட முறைப்படியும் பூமத்திய ரேகைக்கும், கடகரேகைக்கும் நடுவில் சூரியன் பயணிக்கும் காலம், புவி மையக் கோட்பாட்டின் அடிப்படையில், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரை சூரியன் பிரவேசிக்கும் காலம், அக்னிநட்சத்திர காலம் ஆகும்.
அக்னி நட்சத்திரத்தில் முதல் ஏழு தினங்களில் மெதுவாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அடுத்த ஏழு தினங்கள் அதிக அளவில் வெப்பம் தெரியும். கடைசி ஏழு தினங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.
புராணத்தில் அக்னி நட்சத்திரம் :
கார்த்திகை நட்சத்திரத்திற்கு அதிபதி அக்னி பகவான்.
அக்னி தேவன் தர்மத்தின் வடிவாக உள்ளவன் என்றும், சூரியனின் கதிர்களிலிருந்து பிறப்பெடுத்தவன் என்றும் பதினெண் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் அக்னி தேவனின் பசியைப் போக்க பகவான் கிருஷ்ணரும், அர்ஜூனனும் யமுனை ஆற்றங்கரையில் இருந்த காண்டவ வனத்தை எரித்துண்ண உதவிய அந்த 21 நாட்களே அக்னி நட்சத்திர காலம் எனக்கூறப்படுகிறது.
தாரகாசுரனை வதம் செய்யும் பொருட்டு சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்த போது ஆறு ஒளி பிழம்புகள் உருவாகின. அவைகளை வாயு பகவான் சரவணப் பொய்கையில் விட அத்தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக மாற கார்த்திகைப் பெண்கள் அவைகளை எடுத்துவளர்த்தனர். தீப்பொறிகளின் (குழந்தைகளின்) வெம்மை - உக்கிரம் கார்த்திகைப் பெண்களை அடைந்தது. பின்னர் கார்த்திகைப் பெண்கள் பார்வதிதேவியிடம் ஒப்படைக்க ஆறு குழந்தைகளும் ஒன்றாகி ஆறுமுகனாக, முருகனாக தோற்றம் தந்தனர் என்கிறது பவிஷ்யோத்ரபுராணம்.
விவசாயிகள் கூறும் 'கர்ப்ப ஓட்டம்’ :
சித்திரை மாத அக்னி நட்சத்திர வெயிலில் வயலில் வெடிப்புகள் தோன்றி அடுத்து வரும் மாதங்களில் அடிக்கும் காற்றினால் பூமியின் மேல் உள்ள இலைகள், சருகுகள் மற்றும் பிற குப்பைகள் அனைத்தும் வெடிப்புகளுள் நுழைந்து தங்கி விட பிறகு வரும் மழைக் காலங்களில் வெடிப்புகள் மூடப்பட்டு உள்நுழைந்த அனைத்தும் உரமாகி மண் வளம் பெறும் இதனை தான் ‘கர்ப்ப ஓட்டம்’ என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடியதும்,
செய்யக்கூடாததும்:
அக்னி நட்சத்திர நாட்களில் என்ன செய்யலாம்? எதைச் செய்யக்கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.
இந்த நாட்களில் முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
அக்னி நட்சத்திர வெப்பம் தவிர்க்க இயற்கை மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள் :
அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தால் நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க குளிர்ச்சி தரும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதிக கார உணவு வகைகளையும், மாமிச உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைவதை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும். கடும் வெயிலில் செல்லவேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டால் காலுக்கு நல்ல இதமான சூட்டைத்தாங்கும் காலணிகள் அணியலாம், தலைக்கு தொப்பி வைத்துக்கொள்ளலாம், கண்களை சூரிய வெப்பம் தாக்காமல் இருக்க, குளிர் கண்ணாடிகளை அணியலாம். அவ்வப்போது, தண்ணீரைக்குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். செயற்கைபானங்களைக் குடிப்பதைவிட, நீர்மோர் குடிப்பது, இளநீர் மற்றும் நுங்கு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கைபானங்களைப் பருகலாம், கோடையில் நம் உடலில் நீர்ச்சத்து எப்போதும் நிறைவாக இருப்பதை, உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
வழிபாடுகள்:
இந்துக்கள் அக்னி நட்சத்திர நாட்களில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முருகர் ஆலயங்களில் வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள்.
சிவன் அக்னியின் அம்சம் ஆனதால் சிவன் வழிபாடு செய்யப்படுகிறது. அம்மை போன்ற நோய்கள் வராமல் இருக்க அம்மன் கோயிலில் பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.
சில கோயில்களில் விசிறி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது வழக்கம்.
வீடுகளில் அக்னி நட்சத்திர வெப்பம் தணிக்க வேப்பிலை,மஞ்சள் கலந்த தண்ணீரைக் கொண்டு வீட்டை தூய்மை செய்தும், உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு,
‘அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!’
என சூரிய காயத்ரீ மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்பு.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் 04/05/2019 சனிக்கிழமை தொடங்கி 28/05/2019 செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது.
Comments
Post a Comment