சித்ரா பௌர்ணமிக்கு அப்படி என்ன விசேஷம்...
சித்ரா பௌர்ணமிக்கு அப்படி என்ன விசேஷம்...
ஆரூர் சுந்தரசேகர்.
தமிழ் மக்கள் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தையும் இறை வழிபாட்டிற்குரிய நாளாக கருதுகின்றனர். சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியை சித்ரா பௌர்ணமி என்று கொண்டாடுகிறார்கள்.
சித்ரா பௌர்ணமி அன்று எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் சில கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடத்தப்பட்டு பௌர்ணமி தினம் சிறப்பு அபிஷேக,ஆராதனை செய்யப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி அன்று வரண்ட ஆற்றில் ஊற்று தோண்டி அதற்கு திருவூறல் என்று பெயர் சூட்டி, அங்கே இறைவனை வலம் வரச் செய்வார்கள். சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை இறைவனுக்கு படைத்து பூஜிப்பார்கள். இந்த நாளில் உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து ஆற்றங்கரையில் பாடி, மகிழ்ந்து உண்பதும் தொன்று தொட்டு வரும் வழக்கமாகும்.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இப்படி நீர்நிலைகளுக்கு அருகில் மக்களை வரவழைப்பதே இந்த சித்ரா பெளர்ணமியின் விஞ்ஞான பூர்வமான உண்மையாகும்.
தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவாசை அன்று விரதமிருந்து வழிபாடு செய்வதைப் போன்று; தாயாரை இழந்தவர்கள் சித்ரா பௌர்ணமி விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெறும் நந்நாளாக அமைகின்றது.
சித்ர குப்தனின் அவதாரம்:
சித்ர குப்தன் அவதரித்த நாளும் இன்றுதான். அவர் சிவன் வடித்த சித்திரத்தைக் கொண்டு உருவாக்ப்பட்டதாலும், சித்திரை மாதத்தில் பிறந்ததாலும் சித்ர குப்தன் என்று அழைக்கப்படுகிறார்.
கல்வி வேள்விகளில் சிறந்தவரான சித்ரகுப்தனை தகுந்த வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவ, புண்ணியங்களை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம்.
சித்ர குப்தன் பூஜை:
அன்று காலையில் வீட்டின் பூஜை அறையில் ஒரு மனையில் மாக்கோலம் போட்டு சித்ர குப்தன் படம் வரைந்து "மலையத்தனை பாவம் செய்திருந்தாலும் கடுகளவு புண்ணியத்தை கொடுக்க வேண்டிக் கொள்கிறோம்" என்று ஒரு காகிதத்தில் எழுதி அதனை மனை மேல் வைத்து பூஜை செய்து
"சித்ர குப்தம் மஹாப்ராக்ஞம் லேகனீபுத்ர தாரிணம்.
சித்ரா ரத்னாம்பரதாரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்"
என்ற சித்ரகுப்தரின் ஸ்லோகத்தை தியானம் செய்து தீபம், தூபம் மற்றும் பூக்களால் அர்ச்சிப்பதுடன், சித்திரகுப்தருக்கு பிரியமான சித்ரான்னங்களான தேங்காய் சாதம், தயிர் சாதம், உளுந்து வடை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.
நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சித்ரா பவுர்ணமி அன்று காலை விரதத்தை ஆரம்பித்து "ஓம் சித்ரா குப்தாய" என்று நமக்கு முடிந்தவரை சொல்ல வேண்டும்.
ராகுபகவான் சித்ரகுப்தனுக்கு கட்டுப்பட்டவர்.
ராகு தோஷம் உள்ளவர்களும், திருமணம் தடைபட்டவர்களும் சித்ரகுப்தனை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும்,
சித்ரகுப்தனை வணங்கினால் சிந்தனையில் தூய்மை ஏற்பட்டு, பாவ புண்ணியம் பற்றிய அறிவு கிடைக்கும் இதனால் மேலும் பாவம் செய்யாமல் இருக்கலாம் என்பது ஐதீகம்.
அன்றைய தினம் உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.
இந்தியாவில் பதினொரு இடங்களில் சித்ரகுப்தருக்குத் தனிக் கோயில்இருந்தாலும், தென்னகத்தில் காஞ்சிபுரத்தில் மட்டும்தான் கோயில் உள்ளது.
சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்:
மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டு தோறும் நிகழும் சிறப்புமிக்க திருவிழாவாக நடைபெறும்.
கன்யாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம்.
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றதாக இருக்கிறது.
Comments
Post a Comment