விகாரி ஆண்டே வருக....மாரியை கொண்டு தருக....

விகாரி ஆண்டே வருக....மாரியை கொண்டு  தருக....
ஆரூர் சுந்தரசேகர்.

விகடகவி வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு (விகாரி) நல்வாழ்த்துக்கள்.
  இந்த தமிழ் புத்தாண்டில்   மும்மாரி மழை பொழிந்து நாடு செழித்து  வளம் பெருக எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டிக் கொள்வோம்.

விளம்பி ஆண்டு நிறைவு பெற்று மங்களரகமான விகாரி வருடம், உத்தராயண புண்ணிய காலம்  ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி 07 நிமிடத்துக்கு, 14/04/2019 அன்று பிறக்கிறது.

தமிழ்ப் புத்தாண்டு  என்பது  தமிழர்கள் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள  கேரள மக்கள் விஷு என்றும், அசாம் மக்கள் பிஹு என்றும், பஞ்சாப் மக்கள் வைஷாகி என்றும், மேற்கு வங்க மக்கள் பொஹெலா பொய்ஷாக் என்றும்  ஒடிசா மக்கள் மகா விஷுபா சங்கராந்தி என்றும்  கொண்டாடுகிறார்கள்.
இவர்களோடு மணிப்பூர், திரிபுரா,பிஹார், உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மக்களும் புத்தாண்டை பல்வேறு பெயர்கள் இட்டு அழைத்து, கொண்டாடுகின்றனர்.

ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கணக்கிடப்பட்டதாகும். அதாவது  பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது.  இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரியன்  மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது ஆண்டு  தொடங்கும்  மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.

சித்தர்கள் அருளிய சித்திரை:

தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டும், சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. நாடி ஜோதிடத்தில் சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும், பங்குனியைக் ‘கடை மாதம்’ என்றும் சித்தர்களின் ஏட்டுசுவடிகளில் எழுதியிருக்கிறார்.  அதேபோல சித்திரையில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷ ராசியைத் ‘தலை’ என்றும், ‘தலை ராசி’ என்றும் சொல்லியுள்ள குறிப்புகள் உள்ளன. இடைக்காட்டுச் சித்தர் மாத பலன்ளையும், வருட பலன்களையும் எழுதி வைத்துள்ளார். அவற்றை இன்றுவரை நாம் பின் பற்றி வருகிறோம். அவரும் சித்திரை மாதம் தொடங்கியே வருடத்தைக் கணக்கிட்டுள்ளார்.
                 சங்க இலக்கியமான நக்கீரர்  இயற்றிய நெடுநல்வாடையில் சூரியன் மேஷம்(சித்திரையில்) தொடங்கி  அடுத்தடுத்த 11 ராசிகளுக்கும் பயணப்படுவதாக எழுதியுள்ளார்.
  அகத்தியரின் பன்னீராயிரம், மற்றும்  புட்பவிதி முதலான நூல்கள்  சித்திரை மாதம் தான்  முதல் மாதம் என்று சொல்கின்றன.
    சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

தமிழ்ப் புத்தாண்டு அன்று செய்ய வேண்டியவை:

தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதம் பிறப்பதற்கு முதல் இரவு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு அதன் மேல் ஒரு மனையை  வைத்து அதற்கும் அழகியகோலமிட்டு அதில் ஒரு நிலைக் கண்ணாடியை வைத்து அதற்கு   முன்பாக தட்டில்  பணம், காசுகள், நகைகள், அரிசி, பருப்பு மற்றும் பலவகையான பழங்கள்,காய்கறிகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து காலையில் தூங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பார்கள் இது காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.
  சித்திரை புதுவருடமன்று புதுப்  பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர்  புது வருடப் பஞ்சாங்கத்தை வீட்டில் உள்ள  பெரியோர் வாயால் பஞ்சாங்கப் பலனை கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்காக உள்ளது.  இதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கி கொள்ளலாம்.

இனிப்பும் கசப்பும் , இன்பமும் துன்பமும்

சித்திரை பிறப்பன்று வீடுகளில் மதிய விருந்தில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, வடை பருப்பு, பாயசம் போன்றவை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
இன்பமும் துன்பமும் கலந்து வருவதே வாழ்க்கை என்ற தத்துவத்தை உணர்த்தவே சமையலில் வேப்பம் பூவும், பாயசமும் சரி விகிதமாக பரிமாறப்படுவதாக ஐதீகம்.
இந்த புது வருடத்தில் (விகாரி) இறைவழிபாடு, தானதர்மம், ஆசிபெறுதல் போன்றவற்றைக் கடைபிடித்து  சித்திரை மாதத்தை நாமும் மகிழ்ச்சியுடன் வரவேற்று, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வோம்.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...