ஐஸ்வர்யங்களை அருளும் ருத்ராட்சம்
ஐஸ்வர்யங்களை அருளும் ருத்ராட்சம்
ருத்திராட்சத்தைப் பார்ப்பதாலே மகா புண்ணியம், தொட்டால் கோடி புண்ணியம், அணிந்துகொண்டால் பல கோடி புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
வடமொழியில் ருத்ராட்சம் என்பதற்கு ருத்திரனின் கண்கள் என்று பொருள். ருத்ரன் + அட்சம் என்பதே ருத்ராட்சம். இதனை சிவனின் கண் என்று சிலரும் சிவனின் கண்ணில் இருந்து வந்தது என்று வேறு சிலரும் சொல்கின்றனர்.
தேவர்களை துன்புறுத்திக் கொண்டிருந்த திரிபுராசுரன் என்ற அசுரனை சிவபெருமான் ஸம்ஹாரம் செய்த போது, சிவனின் (ருத்ரன்) கண்(அக்ஷம்)களிலிருந்து பூமியில் விழுந்த நீர்த் துளியிலிருந்து ருத்ராட்சம் தோன்றியது என சிலரும்,
கடும் தவம் செய்து கொண்டிருந்த சிவபெருமான் தவம் முடிந்து கண் விழித்த சமயம், கண்களிலிருந்து வழிந்த நீரிலிருந்து தோன்றியது ருத்ராட்சம் எனவும் ,
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் உள்ள கண்மணியே ருத்ராட்சமாக மாறியதாகவும் சொல்கிறார்கள்.
ருத்ராட்சம் அணிபவரை சிவபெருமான் கண்போலக் காப்பாற்றுவார். எனவே ஐந்து முகம் கொண்ட ஒரு ருத்ராட்சத்தையாவது அணியலாம். ருத்ராட்சத்தை எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
ஆதிபராசக்தி ருத்ராட்சம் அணிந்திருப்பதை, "கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் (ருத்ராட்சம்) குப்பை பூட்டி" என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம், பாடல் எண் 330)
ருத்ராட்சத்தின் பெருமையைப் பற்றி சிவபெருமான் தேவிக்கு கீழ்க்கண்டபடி உரைத்ததாக ஸ்ரீமத் தேவிபாகவதம் கூறுகிறது.
ருத்ராட்சத்தை கையில் தொட்டாலே எல்லாவித பாவங்களும் அகலும்.
ருத்ராட்சம் கழுத்தில் அணிவதாலே புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும்
ருத்ராட்சத்தை அணிந்தும், அதனை வழிபாடு செய்கிறவர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை.
ருத்ராட்சத்தின் மேல் நம்பிக்கை இல்லாமல் கழுத்தில் அணிந்து கொண்டாலும் அவர்கள் ருத்ரனின் அருளை பெறுகிறார்கள்.
ருத்ராட்ச மாலை அணிந்த ஒருவருக்கு உணவளிப்பதினால் அவரின் 21 தலைமுறை மக்களும் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடைகிறார்கள்.
மந்திரங்கள், விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் கிடைகின்ற பலன்களை ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் கிடைக்கிறது.
ருத்ராட்ச மாலையை கையில் வைத்திருந்தாலே நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும், உபநிடதங்களையும் கற்றறிந்தவர்களுக்கு ஈடான பலன் கிடைக்கும்.
மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை அணிந்திருந்தால் அவர் ஆன்மா மோட்சம் அடையும்.
பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனோ அல்லது தாழ்ந்தவனோ, சைவ உணவை உண்பவனோ அல்லது அசைவ உணவை உண்பவனோ யாராக இருப்பினும் ருத்ராட்சம் அணிந்தவன் ருத்ரனின் அருளைப் பெறுவர்.
ருத்ராட்சத்தைத் தலையில் சூடியவன், கோடி புண்ணியங்களைப் பெறுவான். காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான். கழுத்தில் அணிபவன் நூறு கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்; பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்; கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.
ருத்ராட்சத்தை அணிந்தவாறு, வேத நியமங்களை ஒருவன் கடைப்பிடிப்பானாயின், அவன் பெறும் பலனை அளவிட முடியாது.
கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்திருப்பவன், இந்த உலக பற்றில் இருந்தும், இன்ப- துன்பங்களில் இருந்தும் விடுபடுகிறான்.
ருத்ராட்சத்தை தானம் செய்பவர்களுக்கு மறு பிறவி கிடையாது.
மகா பெரியவா அவர்கள் அருளிய ருத்திராட்சத்தின் மகிமை :
‘ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்றும், சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்றும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் ருத்ராட்சம் அணிந்து, தினமும் 108 முறை பஞ்சாட்சரத்தைச் சொல்லி வந்தால் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்றும் மகா பெரிவா அருளியுள்ளார்.
நோய்களுக்கு அருமருந்து:
வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகிய முன்று தோஷங்களை நீக்கவும், விக்கலை நிறுத்தவும், சளியை வெளியேற்றவும் ருத்ராட்சம் பலனளிக்கவல்லது என்று தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார் தேரைச் சித்தர். “
வாரணாசிப் பல்கலைக்கழக உயிர் வேதியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் கஹஸ்ராவ் என்பவர் ருத்ராட்சம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் முடிவில் ருத்ராட்சம் மின்காந்த சக்தி உடையதாகக் கண்டறியப்பட்டது. உளவியல் துறையில் மனநோய் சிகிச்சைக்கும் இதைப் பயன்படுத்தலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
ருத்ராட்சத்தை இதயத்திற்கு அருகில் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ருத்ராட்சத்தின் முகமும் பயனும்:
இயற்கையாகவே துளையோடு இருக்கும் ருத்ராட்சம், அனைவரும் அணிந்து கொள்வதற்காகவே அவ்வாறு இருக்கிறது. ருத்ராட்சதில் பலவகை உண்டு. ஒரு முகம், இரண்டு முகம் என்று 21 முகம் வரை இந்த ருத்ராட்சம் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இதில் 14 முகம் ருத்ராட்சம் வரை மனிதர்கள் அணிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இவற்றில் 5 முக ருத்ராட்சம் மிகவும் புகழ் வாய்ந்தது.
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்
ஒரு முகம்
மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ
ஒரு முகமுடைய ருத்ராட்சம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த ருத்ராட்சம் ஏனைய எல்லா முகங்களையுடைய ருத்ராட்சங்களுக்கு அரசனாகையால்,இது தூய உணர்வைக் குறிக்கிறது. அணிபவருக்குப் யோகமும் மோட்சமும் கிட்டும். எனினும் எதிலும் பற்றற்றவராய் இருப்பர்.
இரண்டு முகம்
மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ
இரு முகமுடைய ருத்ராட்சத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும் (சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது இந்த ருத்ராட்சம் அணிவோருக்கு 'ஒற்றுமை' உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கும்.
மூன்று முகம்
மந்திரம் - ஓம் கிளீம் நமஹ
இந்த மும்முகமுள்ள ருத்ராட்சத்தை ஆளும் கோள் செவ்வாய்.இது அக்னி பகவானை குறிக்கிறது. நெருப்பு எப்போதும் தூய்மையாக இருப்பது போல் மூன்று முகமுள்ள ருத்ராட்சத்தை அணியும் அருள் கிட்டியவர்கள் தனது வாழ்க்கையில் செய்த பாவங்களில் விடுபட்டுத் தூய நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக ருத்ராட்சம் தாழ்வு மனப்பான்மை உள்ளார்ந்த பயம் குற்ற உணர்வு மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்
நான்கு முகம்
மந்திரம - ஓம் ஹரீம் நமஹ
இந்த நான்கு முகமுள்ள ருத்ராட்சத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக் குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது.
ஐந்து முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
ஐந்து முகங்களுடைய ருத்ராட்சத்தை ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின் குறியீடான சிவனை குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய ருத்திராட்ச மாலை அணிந்தோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்த ருத்திராட்ச மாலையை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும். அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.
ஆறு முகம்
மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ
இந்த ஆறு முக ருத்ராட்சத்தை ஆளும் கோள் வெள்ளி. இந்த ருத்ராட்சம் சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, திடமான மனம் ஆகியவை அருளப்படும். இந்த ஆறு முக ருத்ராட்சம், மேலாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ஆகியோருக்கு உகந்தது.
ஏழு முகம்
மந்திரம் - ஓம் மஹா லக்ஷ்மியாய நமஹ ஓஅம் ஹீம் நமஹ
இந்த ஏழு முக ருத்ராட்சத்தை ஆளும் கோள் சனீஸ்வரர். இது திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவை அகலும். இந்த ஏழு முக ருத்ராட்சத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படும்.
எட்டு முகம்
மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ
இந்த எட்டு முகமுடைய ருத்ராட்சத்தை ஆளும் கோள் இராகு. இது கணேச பகவானை குறிக்கிறது. இது தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. இதை அணிவோரின் எதிரிகளின் மனத்தையும், நோக்கங்களையும் இந்த ருத்ராட்சம் மாற்றி விடும்.
ஒன்பது முகம்
மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ
இந்த ஒன்பது முக ருத்ராட்சத்தை ஆளும் கோள் கேது. இது துர்க்கையைக் (சக்தி) குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு பராசக்தி வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.
பத்து முகம்
மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ, ஸ்ரீ வைஷ்ணவை நமஹ, ஓம் ஹ்ரீம் நமஹ
இந்த பத்து முக ருத்ராட்சம் கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக ருத்ராட்சத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.
பதினோரு முகம்
மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ
இது பகவான் அனுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உதவும்.
பன்னிரண்டு முகம்
மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ
இது சூரிய பகவானை குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர். இந்தப் பன்னிரண்டு முக ருத்ராட்சம் மந்திரிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உகந்தது. இது வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது.
பதின்மூன்று முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ
இது இந்திரனைக் குறிக்கும். இதனை அணிவோர் எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும் இது நிறைவேற்றும். அத்துடன் அஷ்டமா சித்திகளையும் இது அளிக்க வல்லது. இதை அணிவோர் உலகத்து ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றும்.
பதினான்கு முகம்
மந்திரம் - ஓம் நமஹ சிவாய
இந்தப் பதினான்கு முகமுடைய ருத்ராட்சமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக தன்மையுடைது. இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோருக்குப் பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் கொடுக்கிறது.
பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள்
முனிவர்கள்,ரிஷிகள் இந்த ருத்ராட்சங்களை பூஜையில் வைத்து குடும்பத்திற்கு வளத்தினையும், சிவனின் அருளைப் பெறும்படியும் அறிவுறித்துள்ளனர்.
இப்படி ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
எந்த நட்சத்திரத்திற்கு எத்தனை முகங்கள்:
27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய ருத்திராட்ச முகங்கள்
நட்சத்திரம் நட்சத்திராதிபதி கிரகம் அணிய வேண்டிய ருத்ராக்ஷம்
1) அஸ்வினி – கேது நவ முகம் (9)
2) பரணி – சுக்ரன் ஷண் முகம் (6)
3) கார்த்திகை – சூர்யன் ஏக முகம் (1) அல்லது த்வாதசமுகம் (12)
4) ரோஹிணி – சந்திரன் த்வி முகம் (2)
5) மிருகசீரிஷம் – செவ்வாய் த்ரி முகம் (3)
6) திருவாதிரை – ராகு அஷ்ட முகம் (8)
7 )புனர் பூசம் – ப்ருஹஸ்பதி பஞ்ச முகம் (5)
8) பூசம் – சனி சப்த முகம் (7)
9) ஆயில்யம் – புதன் சதுர் முகம் (4)
10) மகம் – கேது நவ முகம் (9)
11)பூரம் – சுக்ரன் ஷண் முகம் (6)
12) உத்தரம் – சூர்யன் ஏக முகம் (1) அல்லது த்வாதச முகம் (12)
13) ஹஸ்தம் – சந்திரன் த்வி முகம் (2)
14) சித்திரை – செவ்வாய் த்ரி முகம் (3)
15) ஸ்வாதி – ராகு அஷ்ட முகம் (8)
16 )விசாகம் – ப்ருஹஸ்பதி பஞ்சமுகம் (5)
17) அனுஷம் – சனி சப்த முகம் (7)
18) கேட்டை – புதன் சதுர் முகம் (4)
19) மூலம் – கேது நவ முகம் (9)
20) பூராடம் – சுக்ரன் ஷண் முகம் (6)
21) உத்திராடம் – சூர்யன் ஏக முகம் (1) அல்லது த்வாதச முகம் (12)
22) திருவோணம் – சந்திரன் த்வி முகம் (2)
23) அவிட்டம் – செவ்வாய் த்ரி முகம் (3)
24) சதயம் – ராகு அஷ்ட முகம் (8)
25) பூரட்டாதி – சனி பஞ்ச முகம் (9)
26) உத்திரட்டாதி – சனி சப்த முகம் (7)
27) ரேவதி – புதன் சதுர்முகம் (4)
ருத்ராட்சத்தை எப்படி பாதுகாப்பது:.
தினமும் உங்களால் இந்த ருத்ராட்சத்தை அணிந்து கொள்ள முடியாவிட்டால், ஒரு சிறிய பெட்டியில் இதனை வைத்து பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம்.
கனமான நூல் அல்லது கயிறில் கழன்று விடாதபடி, இந்த ருத்ராட்சத்தை அணித்து கொள்ளுங்கள்.
ருத்ராட்சத்தை அணியும் நாள் நல்ல சுப முகூர்த்த நாளாக இருக்க வேண்டும். குறிப்பாக திங்கள், வியாழன் போன்ற நாட்களாக இருப்பது நல்லது.
அடிக்கடி ருத்ராட்சத்தை சுத்தம் செய்யுங்கள். இதன் துளைகளில் அழுக்கு அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்த பிறகு நீரால் இதனை கழுவுங்கள். இதனால் ருத்ராட்சத்தின் புனிதம் பாதுகாக்கப்படுகிறது.
நீண்ட நாட்கள் கழுத்தில் அணியாமல் இதனை பெட்டியில் வைத்திருப்பவர்கள் இந்த முறையை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.
ருத்ராட்சம் அணிந்து, "நமசிவாய" என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு சிவபெருமான் நிச்சயம் அருள் புரிவார். இதனை தங்கள் வாழ்க்கையில் அனுபவபூர்வமாக உணர்வர்.
Comments
Post a Comment