ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு நைவேத்தியம் பழைய சாதமும், மாவடுவும்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு நைவேத்தியம் பழைய சாதமும், மாவடுவும்...
-ஆரூர் சுந்தரசேகர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அருள்மிகு ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் 13.03.2019 அன்று பங்குனி பிரம்மோற்ஸவம் அதிகாலை 5.15மணிமுதல் 6 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 23ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
பழைய சாதமும், மாவடுவும்...
பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் பழைய சாதமும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் பெருமானின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது.
இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சாதமும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது.
ஒரு ஏழைப் பாட்டிக்காக அவளின் பேரனின் உருவில் வந்து காட்சியளித்த ரங்கநாத பெருமாளின் மனதை நெகிழ வைக்கும் நிகழ்ச்சியை இங்கே பார்ப்போம்.
ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள கிராமம். அந்த ஊரில் எப்போதும் ரங்கநாதரையே நினைத்து வாழும் ஒரு பாட்டி இருந்து வந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அந்த பாட்டி இருவரை மட்டும் உறவுகளாக எண்ணிக்கொண்டிருந்தார். ஒருவர் ரங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பேரன் ரங்கன். ரங்கநாத பெருமாளை எப்போதும் மனதில் நினைத்துக் கொண்டு 'ரங்கா' 'ரங்கா' என்று சொல்லிக் கொண்டே இருப்பார்
ஒருநாள் அந்த பாட்டிக்கு ஒரு சோதனை வந்தது. அந்த சோதனையை கொண்டே பாட்டியை ஆட்கொள்ள எண்ணினார் ரங்கநாத பெருமாள், அன்று பாட்டியின் பேரன் முகம் திருத்திக்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி கொண்ட பிறகு காவிரியில் இறங்கி குளிக்கும் போது காவிரி பெருகி வரத்தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் பேரன் ரங்கன் இழுத்துச் செல்லப்பட்டான். அவன் சென்று நேரமானதால் திரும்பாத பேரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டு ரங்கநாத பெருமாளை வேண்டிய படி அழுதுகொண்டே காவிரிக்கரைக்கு சென்றாள். காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் உயிருடன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான்.
உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாத பெருமானை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுதுக் கொண்டிருப்பாள் என்று பதறி கோயிலிருந்து கிளம்பினான். பேரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று ரங்கநாத பெருமானும் எண்ணினார். உடனே காவிரியின் வெள்ளதைக் கண்டு அழுது புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆறுதல் படுத்த கிளம்பிய ரங்கநாதர் ஜீயர்புரத்து காவிரி கரையருகே முகத்திருத்தம் செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பேரன் ரங்கனாகவே வந்தார் பெருமாள், பாட்டி மிகவும் மகிழ்ந்து பேரனை கட்டி அணைத்து வீட்டுக்கு கூட்டி சென்று பசித்திருந்த பேரனுக்கு பழைய சாதமும், மாவடுவும் கொடுத்து சாப்பிடச் சொன்னாள். ரங்கநாத பெருமான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உண்மையான பேரன் ரங்கன் வந்து விட்டான், பாட்டி திகைத்தாள். அனைவருக்கும் அருள் தரும் ரங்கநாத பெருமான் சிரித்தபடியே ஆசி கூறி மறைந்தார். பாட்டியும் பேரனும் ரங்கநாத பெருமானின் அருளை எண்ணி மனமுருகி வணங்கினார்கள்.
அன்று பாட்டியின் பேரனாக வந்து பழைய சாதமும், மாவடுவும் சாப்பிட்ட ரங்கநாத பெருமாள் இன்றும் அதை நினைவூட்டும் படியாக ஆண்டுதோறும் பிரம்மோற்ஸவ விழாவில் இதை நடத்தி வருகிறார்கள்.
பக்தர்கள் யாராக இருந்தாலும் ரங்கநாதப் பெருமாள் என்றும் காப்பாற்றுவார் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது.
கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பிக்கவும், சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ நாம் "ஓம் நமோ நாராயணாய" என்று பிரார்த்தனை செய்வோம்.
"ஓம் நமோ நாராயணாய..."
Superb 👌👌
ReplyDelete