சீரடி சாயி பாபாவின் கஃப்னி (நீண்ட அங்கி)
சீரடி சாயி பாபாவின் கஃப்னி (நீண்ட அங்கி)
சீரடி சாய்பாபா அக்காலக்கட்டத்தில் பக்சீர்கள் அணியும் சல்லடைத் துணியை அணிந்து வந்தார்.
மல்யுத்தம் தெரிந்தவர்களும், மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்பவர்களும் அத்தகைய சல்லடைத் துணியையே அணிந்து வந்தனர். பாபா அத்தகைய சல்லடைத் துணியை அணிவது சீரடியில் உள்ள மல்யுத்த வீரனான மொஹித்தீன் தாம்போலி என்பவனுக்குப் பிடிக்கவில்லை.
ஒருநாள் திடீரென அவன் பாபாவிடம் வந்தான். வந்த வேகத்தில் பாபாவிடம் ஆவேசமாக பேசத் தொடங்கினான்.
“நீ சாதுவா அல்லது மல்யுத்த வீரனா? சாது என்று சொல்லிக் கொள்ளும் நீ அதற்கேற்ப உடை அணிவதில்லை. என்னைப் போல மல்யுத்த வீரன் மாதிரி உடை அணிகிறாய். இந்த வேஷத்தை கலைத்து விடு என்றான்.
அவன் பேச்சில் அகங்காரம் தெரிந்தது. ஆனால் பாபா அவன் மீது கோபம் கொள்ளவில்லை. அதற்கு மாறாக அவனை சமரசம் செய்யும் வகையில் பேசினார்.
“நான் சிறு வயதில் முஸ்லிம் பக்கீர் ஒருவரால் வளர்க்கப்பட்டேன். அதனால்தான் எனக்கு இத்தகைய உடை அணியும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி நான் யாருக்கும் சவால் விடும் வகையில் இந்த உடையை அணியவில்லை” என்றார்.
“இந்த சல்லடைத் துணி துறவிகளுக்கு ஏற்றது அல்ல. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறினார். பிறகு தான் அணிந்திருந்த சல்லடைத் துணியை முழுமையாக கழற்றி வீசினார். பிறகு வெள்ளையான (நீண்ட அங்கி) கஃப்னி எனும் வகை உடையை அணிய ஆரம்பித்தார். ஒரு துண்டு துணியை தலையைச் சுற்றி முக்காடிட்டு கட்டிக் கொண்டார். கடைசி வரை அந்த கஃப்னி உடையிலேயே இருந்தார்.
இப்பொழுது சீரடி சாயிபாபா அணிந்திருந்த கஃப்னி (நீண்ட அங்கி) மும்பையில் மூன்றாவது தலைமுறையாக வசிக்கும் டாக்டர் கேசவ் கவாங்கரின் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர்.
டாக்டர் கேசவ் கவாங்கரின் மகன் டாக்டர் சாயிநாத் கவாங்கர் மற்றும் இவரது மகன் டாக்டர் தியனேஷ் கவாங்கர்( கேசவ் கவாங்கரின் பேரன்).. டாக்டர் கேசவ் கவாங்கர் சீரடிக்கு 1918ல் 12 வயதில் செல்லும் போது சாயிபாபா அனுமதியுடன் ஷாமா கேசவிற்கு கஃப்னி கொடுத்தார்... டாக்டர் கேசவ் 1954ல் சீரடி சாயி சன்ஸ்தானில் தலைவராக இருக்கும் போது தான் சீரடி சாயிபாபா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் சாயி லீலா இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். தற்போது இவரது பேரன் மும்பையில் வசிக்கிறார். மும்பை சென்றால் சாயிபாபா கஃப்னியை டாக்டர் கேசவ் இல்லத்தில் தரிசனம் செய்யலாம்.
Comments
Post a Comment