தீர்க்க சுமங்கலி பவா" என்பதின் மகத்துவம்
தீர்க்க சுமங்கலி பவா" என்பதின் மகத்துவம்
ஆரூர் சுந்தரசேகர்.
பெண்களை தீர்க்க சுமங்கலி பவா என்று ஆசீர்வதிப்பதை நாம் பார்த்திருக்கிறோம் அதனுடைய மகத்துவம் என்ன என்பதை பார்ப்போம்....
தீர்க்க சுமங்கலி பவா என்ற ஆசீர்வாதத்திற்கு மனைவி கணவனிடம் 5 முறை திருமாங்கல்யம் பெற வேண்டும் என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள்.
அவை பின்வருமாறு....
முதலாவது திருமணத்தன்று
இரண்டாவது ஷஷ்டியப்தபூர்த்தில் (60 வயது)
மூன்றாவது பீமரத சாந்தியில் (70 வயது)
நான்காவது சதாபிஷேகத்தில் (80 வயது)
ஐந்தாவது கனகாபிஷேகத்தில்
*திருமணம்
முதல் திருமாங்கல்யம் திருமணத்தின் போது உற்றார் உறவினர் ஆசியுடன் கழுத்தில் ஏறுகிறது. வாழ்க்கையின் முதல் பிணைப்பின் சாட்சியாகிறது மாங்கல்யம்.
ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.
*ஷஷ்டியப்த பூர்த்தி (60 வயது):
சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கு வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. உறவு முறைகள் கூடி நின்று சந்தோஷப்படும் போது ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும். நமக்கென்று இத்தனை சொந்தங்கள் இருக்கின்றன என்கிற பூரிப்பு அவர்களின் மனதில் ஏற்படும்.
பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு,
சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும்,
புதனுக்கு ஒரு வருடமும்,
வியாழனுக்கு 12 வருடங்களும்,
வெள்ளிக்கு ஒரு வருடமும்,
சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.
இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.
மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நடத்த வேண்டும்.
ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத சாஸ்திரம் படித்தவர் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.பூஜையின் போது 84 கலசங்களில் சுத்தமான நீரை நிரப்பி வேத மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் மூலம் கலசத்தில் உள்ள நீர் புனிதம் அடைகிறது. அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். பிறகு கணவர் இரண்டாவது முறையாக திருமாங்கல்யம் கட்டுவார்.
84 கலசங்கள் ஏன் என்று பார்ப்போம்....
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பது நமக்கு தெரியும், இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...
அக்னி,
சூரியன்,
சந்திரன்,
வாயு,
வருணன்,
அஷ்ட திக் பாலகர்கள் (8)
பாலாம்பிகை,
அமிர்த கடேஸ்வரர்,
நவகிரகங்கள் (9)
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள்.
*பீமரத சாந்தி (70 வயது):
69 வயது முடிந்து 70வது வயது துவங்கும்போது செய்ய வேண்டிய விசேஷமான நிகழ்ச்சிக்கு பீமரத சாந்தி என்று பெயர். சௌனகர், போதாயனர் உள்ளிட்ட மகரிஷிகள் இதற்கான விதிகளைத் தெளிவாக வகுத்திருக்கிறார்கள். நமது ஆயுளில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு அதிபதிகள் கட்டுப்பாட்டில் வாழ்கிறோம்.
பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,
சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,
ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,
பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள். தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக்காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். இப்போது திருமாங்கல்யத்தை மூன்றாவது முறையாக மனைவி கழுத்தில் ஏற்கிறார்.
*சதாபிஷேகம் (80 வயது):
ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் பேச பழகிக் கொள்ள வேண்டும். அவருக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இருக்காது. இப்படி அனைத்திலும் இறைவனாகக்காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவர் அடைகிறார்.
80 வயது 8 மாதம் முடிந்த நிலையில், ஆயிரம் சந்திர தரிசனம் கண்டவர்களுக்கு சதாபிஷேகம் நடத்துவர். இவர்கள் தங்களின் 80 வயதில், மாதம் ஒன்று வீதம் 960 தரிசனமும், இந்த 80 ஆண்டுகளுக்குள் 22 ஆண்டுக்கு ஒன்று வீதம் 32 தரிசனங் களையும் அதிகம் காண்பர். மேலும் 8 மாதங்களில் 8 தரிசனம் கண்டதும், ஆயிரம் தரிசனம் பூர்த்தியாகிறது.
அப்போது தான் சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.
சதாபிஷேக தம்பதிகள் இன்சொல்லும், பணிவுடைமையும் இயல்பாகக் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு உதவுவது என்பது இவர்களது கைவந்த கலை ஆகும். இளமை குன்றாதவராக, தளர் நடை இல்லாமல், இன்முகத்தோடு வாழ்த்து வருபவர்கள், அவர்களைப்பற்றி கூறவேண்டுமாயின் நாள் போதாது. இளவயது முதல் எதைச் செய்தாலும் அவற்றில் நற்பலன்கள் விளைந்திட வேண்டுமென்றும், எல்லோரும் இன்புற்று வாழவேண்டுமென்றும், இறையருளை எல்லோரும் பெற வேண்டுமென்றும் நினைப்பவர். நான்காவது திருமாங்கல்யம் சதாபிஷேகத்தில் மகன் மகள், பேரன் பேத்திகள் என 2 தலைமுறை வாரிசுகளின் மகிழ்ச்சி ததும்ப அவர்கள் முன்னிலையில் கணவர் மனைவிக்கு நான்காவது முறையாக திருமாங்கல்யம் அணிவிக்கிறார்.
*கனகாபிஷேகம்:
(கடவுள் விக்கிரகம் அல்லது மகான் போன்றோருக்கு) பொன் நாணயங்களால் செய்யும் அபிஷேகம்.
இறையோடு இரண்டறக் கலந்து இறைச் சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு தன் சீமந்த புத்ரனுக்குப் பிள்ளை (பேரன்) பிறந்து அவனுக்கும் புத்ரன் (கொள்ளுப்பேரன்) பிறக்க வேண்டும். அவன் கையால் அபிஷேகம் கிடைத்தால் கனகாபிஷேகம். இதுவே "அஷ்டோத்தர சதருத்ர கலசாபிஷேகம்" என்றும் சொல்லப்படுகிறது. மற்றும் தனக்கென்று வாரிசு இல்லாதவர்கள் தனது 96வது வயதில் கனகாபிஷேகம் செய்து கொள்ளலாம்.
இவர்கள் செயற்கரிய செயல்களை செய்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
தமக்கு சம்பந்தப்பட்டவைகளையும் தாம் செய்யும் அனைத்துக் காரியங்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விடுபவர்கள்.
இந்த ஜென்மாவின் ஐந்தாவது திருமாங்கல்யம் கணவரிடம் இருந்து மனைவி பெறுகிறார் என்றால் மிக நிறைவான வாழ்க்கை என்பதின் உச்சம் இது தான். இந்த பெரும்பேறு எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தீர்க்க சுமங்கலி பவா என்ற ஆசியின் மகத்துவம்.
தீர்க்க சுமங்கலி பவா என்ற ஆசி நம்மை நீண்ட நெடுங்காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வை தொடர்வோம்.
இந்த தொகுப்பை எழுதும்போது இதனை எனது தாய்,தந்தைக்கு 60ஆம் ஆண்டு திருமண நாள் நிறைவையொட்டி சமர்ப்பணம் செய்ய நான் ஆசைப்பட்டேன். அதனால் அவர்களை பற்றிய சில வரிகள்...
"தாயிற் சிறந்த கோயிலிலும் இல்லை"
"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை"
எனது தாய் தாயம்மாள் அவர்கள் தனது பெயருக்கு ஏற்றார் போல் இன்றும் பலர் இவரைத் தங்களின் தாயாகவே நினைக்கின்றனர்.
நாங்கள் சென்னையில் இருந்ததால் எங்கள் உறவினர் மற்றும் பலர் எங்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டு இன்று நல்ல நிலையில் இருக்கின்றனர் என்றால் அதற்கு காரணம் எங்கள் தாய் தான், அன்று எங்கள் தந்தையின் ஒற்றை வருமானத்தில் நான் மற்றும் எனது இரு சகோதரர்களும், ஆறு சகோதரிகளும் இருக்கும் போது சற்றும் முகம் சுளிக்காமல் வந்தவர்களுக்கு சமையல் செய்து உபசரித்தார் என்றால் எவ்வளவு பெருமைக்குரியது.
என் மனைவி மறைவிற்கு பின் எனது மகள், மகனுக்கு தாயாக இருக்கிறார்.
இப்படிப்பட்ட தாய் எனக்கு அமைந்ததை நான் பெருமையாக கொள்கிறேன்.
என் தந்தை சுந்தரம் என்றால் ஒழுக்கம்,உண்மை,நேர்மை இதுதான் ஞாபகம் வரும். குடும்ப வாழ்க்கையிலும், அரசு வேலையிலும் அவர் இதனை கடைப்பிடித்தார்.
அரசு பதவியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக சேர்ந்து படிப்படி யாக முன்னேறி துணை ஆட்சியராக ஓய்வு பெற்றவர். மிகவும் சாதாரணமானவர். நேர்மையான அதிகாரிகள் சிலரில் இவரும் ஒருவர். இன்றும் இவருடன் பணியாற்றியவர்கள் இப்பொழுது உயர் அதிகாரிகளாக இருந்தாலும் மதிக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
இவரை பற்றி ஆனந்தவிகடன் 1997 அக்டோபர் மாதம் நான்கு வாரம் தொடர்ச்சியாக "சாதாரண மனிதர்கள்" என்ற தலைப்பில் பேட்டி எடுத்துப்போட்டது பெருமைக்குரியது.
இவர் எங்களுக்கு பொருட்செல்வத்தை தராவிட்டாலும் கல்விச்செல்வத்தை கொடுத்து எங்களை வாழ்க்கையிலும் முன்னேற வழிவகுத்தார்.
இவர் தனக்கென்று என்று சொந்தமாக ஒரு வீடு கூட வாங்கவில்லை என்றாலும் அவருடைய ஆசியுடன் நாங்கள் அனைவரும் இப்போது சொந்த வீடு வாங்கி நலமுடன் இருக்கின்றோம்.
இவர் அரசு பணியில் சேர்வதற்கு முன்பு 1950களில் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்துக்கொண்டே தினசரி, வார இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியிருக்கிறார். இப்பொழுது நான் ஆன்மீக எழுத்தாளர் அந்தஸ்தை பெறுவதற்கான அவருடைய Gene(மரபணு) தான் காரணம்.
இன்றும் தனது பேரன்,பேத்திகளுக்கும் மற்றும் கொள்ளு பேரன்,கொள்ளு பேத்தி களுக்கு ஒழுக்கம், உண்மை, நேர்மை பற்றி சொல்லிக் கொடுப்பது
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
Comments
Post a Comment