மாசி மகத்துக்கு என்ன சிறப்பு... ஆரூர் சுந்தரசேகர்

மாசி மகத்துக்கு என்ன சிறப்பு...
ஆரூர் சுந்தரசேகர். 


    மாசி மகம் 2019 பிப்ரவரி மாதம் (செவ்வாய்க்கிழமை) 19.02.2019 அன்று வருகிறது.
     மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்றும் கொண்டாடப்படுகிறது.
      தென்  இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
     இந்நாளில் தான் பார்வதி தேவி, தட்சன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
     ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகன் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசித்ததும் மாசி மகம் அன்றுதான்.
     பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடலாம்.
  தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பினை எடுத்துரைக்க, ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.
    ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதில் இருந்து விடுபட வருணன், சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்தார்.  இந்த நிலையில் வருணன் கட்டுண்டு கிடந்ததால், உலகில் மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது. அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மக திருநாளாகும். விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம், ‘இறைவா! நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்தபோது, நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலைக் கிடைத்தது. அதே போல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அருள் செய்ய வேண்டும்’ என்று கேட்டார். சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்தமாடல்  நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங்களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராடலாம்.
     புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமானும், மகா விஷ்ணுவும் உரிய பலனை வழங்குவார்கள். ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கி எழுந்தால்  சொர்க்கப்பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் செய்த புண்ணியத்திற்கு ஈடே கிடையாது.
     மாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி விட்டு துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் இன்பமும், வெற்றியும் கிடைக்கும். மாசி மகத்தில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம்.
   இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை, சகல தோஷ நிவர்த்தி ஏற்படும்.
     குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டித்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
     இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள் காலை எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி,  சிவன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். அத்துடன்  அன்னதானம் வழங்குவது சிறந்தது. 
மகாமகம்:
    மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. அதாவது மாசி மாதத்தில் கும்ப ராசியில் சூரியனும் சிம்ம ராசியில் குருவும் வரும் பௌர்ணமியுடன் வரும் மக நட்சத்திர நாளே மகாமகப் புண்ணிய நாளாகும். குரு பகவான் சிம்ம ராசிக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மகாமகப் புண்ணிய காலமும் 12 ஆண்டுகளுக்கொரு முறை வருகிறது  இது கும்பகோணத்தில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  மகாமகத்தை பேச்சு வழக்கில் மாமாங்கம் என்று கூறுகின்றனர். பொதுவாக இந்தியாவில் இந்துக்களின் புனித நீராடல் என்பதானது நதிக்கரைகளில் மட்டுமே காணப்படும் நிகழ்வாகும். கும்பகோணத்தில் மட்டுமே புனித நீராடல் என்பதானது மகாமகக் குளத்தில் நீராடுவதைக் குறிக்கும்.
     இந்துக்களால் புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி போன்ற நதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதற்கு சிவபெருமான் "கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு.  மகாமக நாளில்  அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது புராணக் கதை.
     இந்த நாளில் மகாமக குளத்தில் புனித நீராடுவது, 12 கும்பமேளாவில் புனித நீராடியதற்கும், 108 ஆண்டுகள் காசியில் வாழ்ந்து கங்கையில் தினமும் நீராடியதற்கும் சமம் என்று கருதப்படுகிறது.
     சென்ற  பிப்ரவரி 2016 மகாமகம்  விமர்சையாக நடைபெற்றது இனி அடுத்து 2028-ம் ஆண்டு மகாமக பெருவிழா நடைபெற உள்ளது.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...