ரத சப்தமி - 12 02.2019..... (ஆரூர் சுந்தரசேகர்)

ரத சப்தமி 

ஆரூர் சுந்தரசேகர்.

ரத சப்தமி  தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் அனுஷ்டிக்கப்படுகிறது.
கதிரவன் தன் (தட்சிணாயனம்) தெற்கு நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு, வடக்கு நோக்கிய (உத்தராயணம்)பயணத்தைத் துவங்கும் நாளே 'ரத சப்தமி' ஆகும். ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு சக்கரமுள்ள தேரில் பவணி வரும் ஆதவன் அவதரித்த தினம்.
மகாபாரதப் போரில் அர்ஜுனனால் அம்பால்  வீழ்த்தப் பட்ட பீஷ்மர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயணத்தில் உயிர் விட அம்புப் படுக்கையில் காத்திருந்தார். உத்தராயணம் வந்த பிறகும் உயிர் பிரியவில்லை.    "என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?”  வேதவியாசரிடம். என்று பீஷ்மர் கேட்டார்.
“பீஷ்மா, நீ மனோ வாக்கு காயத்தால் தீங்கு புரியாவிட்டாலும் பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்தது தான் பாபம். அதற்கான தண்டனையிலிருந்து  நீ தப்பமுடியாது.” என்றார்  வியாசர். பீஷமருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், சபை நடுவே பாஞ்சலியின் உடையை துச்சாதனன் பறித்து அவமானம் செய்தபோது அதை தடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என பீஷ்மர் உணர்ந்து இதற்கு என்ன பாப விமோசனம் என்று வியாசரிடம் கேட்க
‘பீஷ்மா எப்பொழுது உன் தவறை உணர்ந்து வருந்துகிறாயோ, அப்போது அகன்று விட்டாலும் அனைத்தையும் கண்டும் காணமல் இருந்த கண்கள், செவி, வாய், தோள், கைகள், புத்தி உள்ள தலை ஆகியவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார் வியாசர். உடனே சூரியனின் நெருப்பைக் கொண்டு தன்னைப் சுட்டு எரிக்க  வேண்டினார் பீஷ்மர்.
   வேதவியாசர் முன்கூட்டியே தான்  கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, ''பீஷ்மா, இந்த எருக்கன்  இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில்  உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்'' என்றவர்,  அதன்படி பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன  அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.
அதனால் தான் நாம் இன்றும் ரத ரதசப்தமி அன்று பாபங்கள் தீர  எருக்க இலையை தலையில் வைத்து ஸ்நானம் செய்கிறோம்.

ரத சப்தமி நாளில் ஸ்நானம் செய்யும் முறையும் மற்றும்  வழிபடும் முறையும்:

ஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள், தலையில் வைத்து நீராட வேண்டும்.
ஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்...
ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து  ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி!  த்வாம் ஸப்த லோகைக மாதரம்  ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !
அன்றைய தினம் வாசலில் தேர்க்கோலமிட்டு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர்  இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.
ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருப்பதிவெங்கடாஜலபதி கோயிலிலும் திருவிழாக்கள்  நடக்கும் ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் ஏழுமலையான் மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

உண்மை பக்தி எது ?

ஆனந்தத்தை அள்ளித் தரும் நந்திகேஸ்வரர்...