மஹோதயம்...(04.02.2019)
பிப்ரவரி மஹோதயம்... மகத்துவம்..
ஆரூர் சுந்தரசேகர்.
அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் தினங்கள் புண்ணிய காலங்களாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில நட்சத்திரங்கள், திதிகள், ராசிகள், குறிப்பிட்ட நாட்களில் அமைந்துவிட்டால் அந்த நாட்கள் மிகச் சிறந்த புண்ணியத் திருநாளாக அமைந்துவிடுகின்றன.
வருகிற தை அமாவாசை (4.2.2019) அன்று எல்லா பஞ்சாங்கத்திலும் "மஹோதயம்" என்று குறிப்பிட்டுள்ளது.
மஹோதயம் என்பதின் ஒரு சிறிய விளக்கம்.
சாதாரணமாக அர்த்தோதய/மஹோதய புண்யகாலங்கள் பல வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும்.
உதயம் என்றால் காலையில் சூரியனின் உதயம் என்பது எல்லோரும் அறிந்ததே ஆனால் 04.02.2019 அன்று மஹத்தான உதயம் என்கிறது சாஸ்திரம்.
மாக மாசத்தில் வரும் (குரு அஸ்தமன காலத்தில்) திங்கள்கிழமையும்,(ஞாயிறானால் அர்த்தோதயம்) ச்ரவணநக்ஷத்ரமும், வ்யதீபாதயோகமும் சதுஷ்பாத கரணமும் சேர்ந்த நாளில் ஏற்படுவதாகும்.
இந்நாள் அலப்யம்—கிடைதற்கறியது எனப்படும்.
இதுவே சூர்யோதய காலத்தில் வ்யதீபாத யோகத்தின் நாலாவது பாதமும், அமாவாசையின் முதல்பாகமும், ச்ரவணத்தின் நடுப்பாகமும் ஒரு சேரக் கிடைப்பது அதிவிசேஷமாம்.
அன்று சூர்யோதயத்திற்கு முன்பாக சமுத்ரம், மஹாநதி, ஆறு, குளம் அல்லது கடைசி பக்ஷமாக கிணற்றிலோ
சுத்தராய் சங்கல்பம் செய்து ஸ்நானம் செய்து, வேதவித்துக்களுக்கு தானம் கொடுத்தல், மந்த்ர ஜபம், தேவதா பூஜைகள், காம்ய ஹோமங்கள்,பித்ரு பூஜனமாக அத்தேவதை களுக்கு ஸ்ராத்தம், தர்ப்பணம் போன்ற கர்மங்கள் செய்வது அனந்தமான பலனைத் தரும், என்றும்,அந்த நாள் கோடி சூர்ய க்ரஹணத்திற்கு சமானம் என்றும் ரிஷிகள் கூறியுள்ளார்கள்.
ஆதாரம்: ஸ்ம்ருதி முக்தாபலம் என்ற வைத்யநாத தீக்ஷிதீயத்தில்(ஸ்ரீ மடம் வெளியிட்டுள்ள புதிய பதிப்பு) ஸ்ராத்த காண்டம் பக்கம் 220
மகாபாரதத்தில் இத்தகைய அரிய திருநாளைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தை மாதத்தில் அமாவாசையன்று ஞாயிற்றுக்கிழமை, அஸ்வினி, திருவாதிரை, திருவோணம், அவிட்டம், ஆயில்யம் ஆகிய திருநட்சத்திரங்கள் அமைந்துவிட்டால் அத்தகைய புண்ணியத் திருநாள் வ்யதி பாதம் அல்லது வ்யதி பாத யோகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது நூறு சூரிய கிரகணங்களுக்கு இணையான புண்ணியத் திருநாளாகக் கருதப்படுகிறது. அதே புண்ணியத் திருநாள் தை மாதத்தில் அமாவாசையன்று ஞாயிற்றுக்கிழமை திருவோண நட்சத்திரத்தில் அமைந்தால் அது அர்த்தோதயம் எனப்படும். அதைப் போலவே தை மாதம் அமாவாசையன்று திருவோணம் நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமை மஹோதய புண்ணிய நாளாக சாஸ்திரங்கள் எடுத்துரைப்பதாக துவாபர யுகத்தில் தோன்றிய மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய நாட்களில், கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும், புண்ணிய தீர்த்தங்களிலும், சமுத்திரங்களிலும் புனித நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்த நற்பலன்களைத் தரும். மேலும், தகப்பனார் இல்லாதவர்கள் அமாவாசை, மகாளய பட்சங்கள் போன்ற நாட்களில் தர்ப்பணம் செய்ய இயலாமல் போனவர்களும் இந்த மஹோதய புண்ணிய காலத்தில் தர்ப்பணம் செய்வது நல்லது.
Comments
Post a Comment