ஸ்ரீசுதர்சன ஜெயந்தி...அறிந்து கொள்வோம்...
ஸ்ரீசுதர்சன ஜெயந்தி...அறிந்து கொள்வோம்... ஆரூர் சுந்தரசேகர். ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீசக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீசுதர்சன ஜெயந்தி உற்சவமாக கொண்டாடப்படுகிறது. சுதர்சன சக்கரம் என்றதும் நம் நினைவில் வருவது ஸ்ரீமகாவிஷ்ணுதான். அவரது திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். தன்னுடைய நான்கு கரங்களிலும் சங்கு (பாஞ்சசன்யம்), சக்கரம் (சுதர்சனம்), கதை (கவுமோதகீ), வாள் (நந்தகம்) ஆகியவற்றையும், தோளில் வில்லையும் (சாரங்கம்) ஆயுதங்களாகத் தரித்திருப்பார். எனவே அவரை பஞ்சாயுதபாணி என்றும் போற்றுவர். மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களிலும் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனம் ஆகும். திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஸ்ரீ சுதர்ஸன மூர்த்தியே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர். சக்கரத்தாழ்வார் என்ற பெயரைத் தவிர, சுதர்சனர், சக்கரபாணி, சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் எனற பெயர்களாலும் இவர் அழைக்கப்படுகிறார்....